யாழ்.குடாநாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த வலிகாமம் வடக்கு, மயிலிட்டி துறைமுகத்தை வளலாய் பகுதியில் அமைப்பது தொடர்பான பாதுகாப்புத் தரப்பினரின் யோசனையை ஏற்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்ற வாரம் யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய டக்ளஸ் தேவானந்தா அவரகள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எமது கடற்றொழில் துறைசார்ந்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மயிலிட்டி துறைமுகம் மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்படல் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இத்துறைமுகத்தை விடுவிப்பது தொடர்பில் நான் பல முயற்சிகளை எடுத்து வந்திருப்பது உங்களுக்குத் தெரியும். அந்த முயற்சிகள் உரிய பயனை எட்டுவதற்கு முன்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
ஆனாலும், எனது முயற்சிகளை நான் கைவிடவில்லை. இந்த அரசாங்கத்துடன் கதைத்து இதற்கொரு நல்ல தீர்வை எட்ட முடியும் என நான் எதிர்பார்க்கிறேன்.
இந்த நிலையில், மயிலிட்டி துறைமுகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதை நாம் அனுமதிக்கப் போவதில்லை என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.