மதுபானம் மற்றும் புகைத்தல் பாவனையால், இலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் மரணிப்பதாகவும் இவ்விரு தீய செயல்களிலும் ஈடுபடுவதற்கு நாளொன்றுக்கு 80 சிறுவர்கள், புதிதாக முயற்சிக்கின்றனர் என்றும் மது மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
மதுபாவனையால் நாளொன்றுக்கு 40 பேரும் புகைத்தல் பாவையால் 60 பேரும் மரணத்தை தழுவி கொள்கின்றனர் என்றும் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்ட விவரம் வெளியிடப்பட்டது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், புற்றுநோய் தடுப்புப் பிரிவு வைத்திய கலாநிதி சிவப்பிரகாசம் அனுசாந்தன், உளவியல் சிரேஷ்ட மருத்துவர் கணேசன் மகேசன், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியர் ஜீவசுதன் சுப்ரமணியம், மது மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமண சேகர ஆகியோரும் பங்குபற்றினர்.
இதேவேளை, கடந்த ஜுன் மாதத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரை வெளியான தென்னிந்திய தமிழ் திரைப்படங்களில் சிறுவர்களை, மது மற்றும் புகைத்தல் உட்பட ஏனைய போதைப்பொருள் பாவனைக்கு ஏமாற்றியிருக்கும் விதம் தொடர்பிலான ஆய்வறிக்கையும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
குறிப்பிட்ட ஆய்வறிக்கையில்,
இந்த காலப்பகுதியில் 18 படங்களிலும் மொத்தமாக புகைத்தல் மற்றும் மது வகைகளை விளம்பரப்படுத்திய நேரம் 144.24 நிமிடங்களாகும். குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளியான திரைப்படங்களின் மொத்த நேரம் 2349 நிமிடங்களாகும்.
இந்த நேர அளவானது ஒரு தனி திரைப்படத்துக்கு உரிய நேர அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புகைத்தல் மற்றும் மது பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட்ட தென்னிந்திய தமிழ் திரைப்படங்களும் இருக்கின்றன என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 18 திரைப்படங்கள் வெளிவந்த அதேநேரத்தில் கூடுதலான தந்திரோபாயங்களை பயன்படுத்தி மது மற்றும் புகைத்தல் போன்றவைகளும் விளம்பரப் படுத்தப்பட்டுள்ளன.
மொத்த நேரத்தில் காட்சிகளில் விளம்பரப்படுத்திய சதவீதம் 57.4 ஆகும். பொதுவான வார்த்தைகளில் விளம்பரப்படுத்திய சதவீதம் 14.2 ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நகைச்சுவையின் மூலம் வார்த்தைகளில் விளம்பரப்படுத்திய சதவீதம் 11.6 ஆகும். விஷேட வார்த்தைகளின் மூலம் விளம்பரப்படுத்திய சதவீதம் 7.4 ஆகும். அத்துடன் பாடல் வரிகளின் மூலம் விளம்பரப்படுத்திய சதவீதம் 11.6ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.