வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் உடன் வெளியேற்றப்பட வேண்டும் சிங்களக் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜெனிவாவில் வைத்து வலியுறுத்தியுள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டிற்கு சார்பாக நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இராணுவத்தையும், சிங்களக் குடியேற்றத்தையும் வடக்கு மற்றும் கிழக்கில் ஆயுதமாகப் பயன்படுத்திவரும் அரசு தமிழ்த் தேசியத்தை சிதைவடையச்செய்து வருவதாகவும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
உடனடியாக இவ்விரு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஐ.நா. கண்காணிப்பு அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கில் நிறுவப்பட வேண்டும் என்றும், அவையே சர்வதேச பங்களிப்புடனான உள்ளக விசாரணைக்கு நல்ல சமிஞ்ஞைகளாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை தவிர இறுதிப்போரின் போது பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமையையும் சர்வதேசம் விளங்கி அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாடுகள் என்பன கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.