அண்மைக்காலமாக வௌியாகி வரும் தமிழ் திரைப்படங்கள் சிறுவர்களை இலக்கு வைக்கும் விதம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையொன்றும், ‘நிதர்சனம்’ பத்திரிகை வௌியீடும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் (ADIC) நேற்று (30) வௌியிடப்பட்டது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ் இரண்டு வௌியீடுகளும் நடைபெற்றன.
இன்று (01) இடம்பெறவுள்ள உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் (ADIC) இந்த விசேட ஊடகவியலாளர் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் தமிழ் திரைப்படங்கள் சிறுவர்களை இலக்கு வைக்கும் விதம் தொடர்பான ஆய்வறிக்கையொன்று வௌியிடப்பட்டது. இவ் ஆய்வறிக்கையில் குறிப்பாக கடந்த ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையான காலத்தில் வௌியான தென்னிந்திய திரைப்படங்களில் சிறுவர்களை மதுசாரம் மற்றும் சிகரெட் உட்பட ஏனைய போதைப் பொருள் பாவனைக்கு ஏமாற்றியிருக்கும் விதம் தொடர்பிலான விவரங்களடங்கிய ஆய்வறிக்கை வௌியிட்டு வைக்கப்பட்டது.
குறிப்பிட்ட ஆய்வறிக்கையின் மூலம் இக்காலப்பகுதியில் வௌியாகியிருந்த 18 திரைப்படங்களில் மொத்தமாக சிகரெட் மற்றும் மதுசார வகைகளை விளம்பரப்படுத்திய நேரம் 144.24 நிமிடங்கள். இந்த 18 படங்களினதும் மொத்த நேர அளவானது 2349 நிமிடங்களாகவும் அவற்றில் போதைப் பொருட்களை விளம்பரப்படுத்தி காண்பித்த காட்சிகள் 144.24 நிமிடங்கள் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நேர அளவானது கிட்டத்தட்ட ஒரு முழுநீள திரைப்படத்திற்குரிய நேரமாகும். அதாவது 18 திரைப்படங்களில் ஒரு திரைப்படம் சிகரெட் மதுபானம் போன்றவற்றுக்கு விளம்பர தூது நிலையமாக மாறி வருகிறது எனலாம். அத்துடன் கூடுதலாக சிகரெட் விளம்பரப்படுத்திய திரைப்படம் மாரி, இத்திரைப்படத்தில் மதுசாரம் மற்றும் சிகரெட் விளம்பரமாகிய மொத்த நேரங்கள் 21.97 நிமிடங்கள். சிகரெட் விளம்பரமாகிய நேரம் 18.22 நிமிடங்களாகும். இத்திரைப்படத்தில் அதிக ரசிகர்களை முக்கியமாக இளைஞர் யுவதிகளை தம் வசம் ரசிகர்களாக கொண்ட தனுஷ் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கூடுதலாக மதுசாரத்தினை விளம்பரப்படுத்திய திரைப்படம் வாசுவும் சரவணனும், இத்திரைப்படத்தில் மதுசாரம் விளம்பரமாகிய நேரம் 24.57 நிமிடங்கள். இதில் நகைச்சுவை நடிகர் சந்தானம் மற்றும் நடிகர் ஆர்யா கூடுதலான இடங்களில் தமது கலைத்திறமையை இவற்றினை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பற்பல வகையில் ஆய்வின் முடிவுகள் சிறந்த முறையில் வௌியிடப்பட்டிருந்தது. அத்துடன் ஆய்வின் முடிவுகள் பற்றி மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய பிரதம நிறைவேற்று அதிகாரி புபுது சுமனசேகரவும், திரைப்பட விளம்பரங்கள் சிறுவர்களை கவரும் விதம் பற்றி சிரேஷ்ட உள நல மருத்துவர் திரு எம். கணேஷனும், புகைத்தல் மற்றும் மதுபானபாவனையினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்ட தலைவர் வைத்திய கலாநிதி டாக்டர் அனுஷாந்தன் சிவப்பிரகாஷமும், திரைப்படங்கள் ஊடாக விளம்பரங்கள் ஊடாக சிறுவர்கள் ஏமாறுவதைத் தடுக்க சமூகத்தினால் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுனவ சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜீவசுதன் சுப்பிரமணியமும், சிறப்புரையாற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் போதைப் பொருள் சம்பந்தமான தகவல்களை உள்ளடக்கிய “நிதர்சனம்” என்ற பத்திரிகையொன்றும் வௌியிடப்பட்டது. இதன்போது மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய பிரதம நிறைவேற்று அதிகாரி புபுது சுமனசேகரவினால் சிரேஷ்ட ஊடகவியலாளரும், சிறந்த நடிகருமான சி. நடராஜசிவம் அவர்களுக்கு நிதர்சனம் பத்திரிகையின் முதற்பிரதி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய பிரதம நிறைவேற்று அதிகாரி புபுது சுமனசேகர, சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்ட தலைவர் வைத்திய கலாநிதி டாக்டர் அனுஷாந்தன் சிவப்பிரகாஷம், சிரேஷ்ட உள நல மருத்துவர் திரு எம். கணேஷன், தேசிய சமூக அபிவிருத்தி நிறுனவ சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜீவசுதன் சுப்பிரமணியம், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.