விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பேண்டசி திரைப்படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, பிரபு, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று அக்டோபர் 1-ந் தேதி வெளியாவதாக இருந்தது. இதையொட்டி, விஜய் ரசிகர்கள் நேற்று முதலே திரையரங்குகளில் கட்-அவுட்கள் வைப்பது, தோரணங்கள் கட்டுவது என ‘புலி’ படத்தை வரவேற்க தொடங்கினர்.
அதேபோல், விஜய் படம் என்பதால், திரையரங்கு உரிமையாளர்களும் ‘புலி’ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். இன்று காலை 5 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு டிக்கெட்டுகளும் விநியோகிக்கப்பட்டன.
ஆனால், நேற்று இரவே ஒரு சில காரணங்களால் நிறைய திரையரங்குகளில் ‘புலி’ படத்தின் காலை 5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, ரசிகர்களுக்கு டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி கொடுத்துள்ளாக கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில திரையரங்குகள் 5 மணி சிறப்பு காட்சிகளை ரத்து செய்யவில்லை.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் திரையரங்கில் இன்று காலை 5 மணிக்கு ‘புலி’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்போவதாக அறிந்ததும், ரசிகர்கள் பட்டாளம் அந்த திரையரங்கை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். ஆனால், அந்த திரையரங்கிலும் ‘புலி’ படத்தின் சிறப்பு காட்சி வெளியிடப்படவில்லை. இதனால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, காலை 8 மணி சிறப்பு காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கு வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனவே, படம் வெளிவருவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு பகல் 12 மணிக்கு மேல் ‘புலி’ படம் வெளியாகும் என தெரிகிறது.