ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் இலங்கை இனப்படுகொலை விசாரணை தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை யில் இவ்வாறு தெரிவித்தார்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட விசாரணையானது மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியை மட்டும் விசாரித்து இருந்த போதிலும், இதுவரைகாலத்தில் வந்துள்ள அறிக்கைகளுள் இலங்கையில் பாரியளவில் இழைக்கப்பட்ட மிகக்கொடூரமான குற்றங்கள் பற்றிய தகவல்களை பரந்தளவில் சேகரித்துள்ள ஒரு அறிக்கை என்கிற வகையில், ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை மீதான விசாரணை அறிக்கையை எமது அமைப்பு வரவேற்கிறது.
அத்தோடு,இந்த ஆராய்வு நடவடிக்கையானது,கடந்த மற்றும் தற்போதய இலங்கை அரசுகளின் ஒத்துழைப்பின்மையால், இலங்கைக்குள் சென்று சாட்சிகளையோ அல்லது தடயங்களையோ நேரடியாக கண்டுகொள்ள முடியாத மிகவும் இறுக்கமான சூழமைவில் இடம்பெற்றது என்பதையும் நாம் அக்கறையுடன் கருத்தில் கொள்கிறோம்.
அத்தோடு, இலங்கையில் இழைக்கைப்பட்ட சர்வதேச சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் மீது விரிவான குற்றவியல் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் இந்த விசாரணையானது ஆகக்குறைந்தது போர் நடந்த முழுமையான காலப்பகுதியையாவது விசாரிக்கவேண்டும் என்றும் இவ்விசாரணை அறிக்கை பரிந்துரை செய்திருப்பதையும் நாம் வரவேற்கின்றோம்.
பல தசாப்த கால யுத்தம், அவசர கால நிலை, மற்றும் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்து கொள்ளும் சூழல் என்பவற்றால் இலங்கையின் நீதித்துறை மற்றும் பாதுகாப்புத் துறை சீரழிந்து போயுள்ளது என ஐ. நா அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் காரணமாக இப்படியான ஒரு விசாரணைக்கு உள்ளகப்பொறிமுறை ஒருபோதும் போதுமானதாக இருக்காது என்பதை ஐநா அறிக்கை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
ஆனால், நீதிவிசாரணைப் பொறிமுறை ஒன்றிற்கான தகைமை இல்லை என்பதை விட, அரசாங்கங்கள் மாறியிருக்கின்ற போதிலும் சிறிலங்கா அரசுக்கு அப்படியான நீதி விசாரணைப்பொறிமுறை ஒன்றிற்கான அரசியல் விருப்பு இல்லை என்பதே முக்கியமானதாகும்.
இந்த அடிப்படையின் பிரகாரம், மேற்குறிப்பிட்டவாறு சிதைந்து உருக்குலைந்து போயுள்ள சிறிலங்காவின் சட்டத்துறையானது பூரணமான ஒரு மீளுருவாக்கத்திற்கு உள்ளாக்கப்படும் வரையிலும்m எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய எந்தொவொரு குற்றவியல் நீதிவிசாரணைப் பொறிமுறையிலும் ஈடுபடுத்தப்படக்கூடாது. அல்லது ஆகக்குறைந்தபட்சம், ஐநாசபையினால் நிர்வகிக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படும் ஒரு குற்றவியல் நீதிவழங்கும் பொறிமுறையின் கீழாக ஒரு சிறிய பங்களிப்பை வழங்கலாம்.
ஆனால் கவலைக்குரிய விடயமாக, ஐநா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் உத்தேச பிரேரணை வரைபானது ஒரு குற்றவியல் விசாரணை ஒன்றை நடைமுறைப்படுத்தக்கோரி நிற்கின்ற போதிலும், மனித உரிமை ஆணையளர் அலுவலக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த {சிறிலங்காவின் நீதித்துறை மீதான} குறைபாடுகளை கருத்தில் எடுக்கத்தவறியிருக்கிறது.
ஐநா மனித உரிமை ஆணையாளரால் முற்றாகவே நிராகரிக்கப்பட்ட உள்நாட்டு பொறிமுறையொன்றாகவே நடைமுறையில் இருக்கப்போகின்ற இந்த செயற்திட்டமானது, நம்பகத்தன்மையானது என்கின்ற தோற்றப்பட்டை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே, வெறுமனே சில வெளிநாட்டு ஈடுபாட்டினை இவ்வரைபு கோரி நிற்கின்றது.
நிறைவாக, இலங்கையில் நியாயமான பொறுப்புக்கூறலும் நீதியும், முழுமையான சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றின் மூலமாக மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும் என்பதே யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் பெருந்தொகையாயுள்ள தமிழர்களின் திடமான நம்பிக்கை என்பதை இங்கு வெளிப்படுத்துகிறேன். என்று தெரிவித்தார்