பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவேண்டும் மாறாக குற்றவாளிகளான இலங்கை அரசாங்கத்தின் விருப்பம் உள்வாங்க தேவையில்லை, சர்வதேச சமூகம் இது சம்பந்தமாக முடிவெடுக்க வேண்டுமென அமெரிக்கத் தீர்மானம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை ஆணையகத்தின் 30 வது கூட்டத் தொடர் நடைபெற்றுவரும்நிலையில் அதில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்தார்.ஆகக்குறைந்தது கூடுதலான சர்வதேச பங்களிப்புடன் கூட்டுப் பொறிமுறையை பரிசீலிக்க தயார் என்றும் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஐ.நா மனித உரிமையாளர்களின் அறிக்கை பாரதூரமானதாக அமைந்தமைக்கு காரணம் புலம் பெயர்ந்த தமிழ் மக்களுடைய சாட்சியமாகும். அமெரிக்க உத்தேச தீர்மானத்தில் சாட்சியாளர்களை பாதுகாக்கின்ற முறைமை பற்றி சரியாக கூறப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக சாட்சிகளை பாதுகாக்கின்ற பொறிமுறை பற்றிய கோரிக்கையை நாம் விடுத்திருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.