Ad Widget

வித்தியா படுகொலை – மரபணு பரிசோதனையை விரைவுபடுத்த நீதிமன்றம் உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்களின் மரபணு பரிசோதனையினை விரைவு படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், மாணவியின் மூக்குக் கண்ணாடியினை பயங்கரவாத தடைச்சட்ட பிரிவினரிடம் கையளிக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின் குமார் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 13 ஆம் திகதி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அந்த விசாரணையின் போது, கடந்த வழக்கில் சந்தேக நபர்கள் 09 பேரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு மரபணு பரிசோதனைக்காக தனியார் பகுப்பாய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த மரபணு பரிசோதனை அறிக்கை தாமதமாகுவதனால், விரைவு படுத்தி மன்றில் சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்துறை பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா அணிந்திருந்த மூக்கு கண்ணாடியினையும் பங்கரவாத தடைச்சட்ட பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டதுடன், மூக்கு கண்ணாடியினை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டு வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கிற்கு மாணவி வித்தியாவின் தாயார் சமூகமளித்ததுடன், மாணவி சார்பில் சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன் ஆஜராகியிருந்தார்.

Related Posts