வடக்கு மாகாணத்தில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட புனர்வாழ்வு

வடக்கு மாகாணத்தில் போரினால் காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என வடமாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

வடக்கு மாகாணத்தில் போரின் போது காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டமொன்றை வடக்கு மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

இறுதியுத்தத்தின் போது காயமடைந்து பலர் சுயமாக இயங்க முடியாதவர்களாக காணப்படுகின்றனர். இவர்களில் பலருக்கு முள்ளந்தண்டுவடம் பாதிப்படைந்து படுக்கையில் உள்ளனர்.

மீள்குடியேறிய பிரதேசங்களில் வாழும் பெரும்பாலானவர்களை வீடுகளில் வைத்து பராமரிப்பதில் பிரச்சனைகள் உள்ளன. இதன் ஒருகட்டமாக முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு சுயமாக இயங்க முடியாத மற்றும் வீடுகளில் வைத்து பராமரிக்க முடியாதவர்களை பராமரித்து மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான நிலையமொன்று கடந்த 2014 ஆம் ஆண்டு சனவரி மாதத்திலிருந்து வவுனியாவில் ‘வைகறை’ எனும் பெயரில் இயங்கி வருகின்றது.

வடக்குமாகாண சகாதார அமைச்சின் கீழ் இயங்கி வரும் இந்த விசேடபிரிவு வவுனியா பொதுவைத்தியசாலையின் நிருவாகத்தின் கீழ் இயங்கி வருகின்றது.

இந்த நிலையத்தில் ஒரு தடவையில் 20 முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கியிருந்து மருத்துவ சிகிச்சை வழங்ககூடிய வசதிகள் உள்ளன.

இவர்கள் தங்கியிருக்கும் காலத்தில் இவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள், உளவளத்துறை ஆலோசனைகள் மற்றும் சக்கரநாற்காலி பயன்படுத்துதல், திருத்தம், சலப்பை முகாமைத்துவம் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டு தமது தேவைகளை தாமாகவே செய்யக்கூடிய வகையில் புனர்வாழ்வழிக்கப்பட்டு கட்டம்கட்டமாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.

இதற்கு மேலதிகமாக இவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியபின்னர். இவர்களுக்கான விசேட மலசலகூடம் அமைப்பதற்கான மானிய உதவியும் வழங்கப்படுவதுடன் சுயதொழில் முயற்சிக்கான உதவிகளும் வழங்க மாகாண புனர்வாழ்வு திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்தவருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts