இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சர்வதேச விசாரணையின் மூலமே நியாயம் கிடைக்குமென பிரித்தானியாவின் இல்பேர்ட் வடக்கு தொகுதிக்கான கொன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினரான நான் கடந்த 10 வருடங்களாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துவருவதுடன் தமிழர்களின் தூதுவராகவும் இருக்கின்றேன்.
இலங்கையில் இறுதிப்போரில் நடைபெற்ற யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு சுதந்திரமான சர்வதேச விசாரணையே தேவை.
போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் காணாமல்போகச் செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். நீதி விசாரணையின்போது சாட்சியாளர்கள் பாதுகாக்கப்படவேண்டும்.
எனவே, என்னைப் பொறுத்தவரையில் சுதந்திரமான சர்வதேச விசாரணையே இலங்கையில் நடத்தப்படவேண்டும். ஐக்கிய நாடுகள் சபை, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுப்பதுடன் அவர்களின் பாதுகாப்பினையும் உறுதிசெய்ய வேண்டும்” – கூறியுள்ளார்.