பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் இளைய மகன் அகில். இவர் தற்போது, ‘அகில்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளர் சி.கல்யாண் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், தெலுங்குக்கும், தமிழுக்கும் அறிமுகமாகும் அகிலை, சூப்பர் ஸ்டார் ரஜினி அறிமுகப்படுத்தி வைக்கப் போவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி அடிபடுகிறது.
அதாவது, இந்த படத்தின் அறிமுக விழாவிற்கு ரஜினிக்கு அழைப்பு விடுக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர், இதில் கலந்துகொண்டால் நாகர்ஜுனாவின் மகனை அவர்தான் அறிமுகப்படுத்தி வைப்பார் என்றும் பேசப்படுகிறது. இந்த விழா அனேகமாக அடுத்த மாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி தற்போது ‘கபாலி’ படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ரித்விகா, கலையரசன், தினேஷ், கிஷோர் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதால், நாகர்ஜூனா மகன் அறிமுக விழாவில் கலந்துகொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.