Ad Widget

“வடக்கின் வல்லவன்” நாவாந்துறை சென் மேரீஸ்

சனிக்கிழமை இரவு மின்னொளியில் இடம்பெற்ற “வடக்கின் வல்லவன் 2015” ஆம் ஆண்டிற்கான உதைபந்தாட்டப் போட்டியில் வடக்கின் வல்லவனுக்கான பட்டத்தை தனதாக்கிக் கொண்டது யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரீஸ் விளையாட்டுக் கழகம்.

football-thinachcheithy

மின் ஒளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கில்லரி வி.க எதிர்த்து நாவாந்துறை சென்.மேரிஸ் வி.க மோதியது. மைதானத்தினை சுற்றி நிரம்பிய ரசிகர் கூட்டத்துடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மேடையிலே விருந்தினர்கள் வீற்றிருக்க மிக கோலாகலமாக இறுதி போட்டி ஆரம்பமானது.

முதற்பாதி ஆட்டம் நிமிடத்திற்கு நிமிடம் கோல் பெறும் அணி எது என எதிர்பார்ப்பு காணப்பட்டாலும் இரு அணியினராலும் கோல் எதுவும் பெறப்படவில்லை. தொடர்ந்து ஆரம்பமான இரண்டாவது பாதி ஆட்டத்தின் 58 ஆவது நிமிடத்தில் கில்லரிக்கு கிடைத்த அரிய தண்ட உதை வாய்ப்பினை ரஞ்சன் அற்புதமாக கோலாக மாற்ற கில்லரி 1:0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து பல முயற்சிகளை சென்.மேரிஸ் மேற்கொண்டாலும், இறுதி நொடிகளில் கோல் பெறும் வாய்ப்புக்களை கில்லரி பின் கள வீரர்கள் அற்புதமாக தடுத்தனர்.

எனினும் ஆட்டம் நிறைவடைய 01 நிமிடம் இருக்கையில் கிடைத்த வாய்ப்பினை சென்.மேரிஸ் அணி தலைவர் ஜெக்சன் கோலாக மாற்றியதன் மூலம் 1:1 என ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

சமநிலை தவிர்ப்புக்காக 05 உதைகளில் வழங்கப்பட்டன. சென்.மேரிஸ் கோல் காப்பாளர் 01 உதையினை துல்லியமாக கணிப்பிட்டு தடுத்ததன் மூலம் 5:4 என்ற கோல் கணக்கில் சென்.மேரிஸ் வெற்றிபெற்று வடமாகாண வல்லவன் 2015 பட்டத்தினை தனதாக்கிக் கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகனாக ஜெக்சன் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த விளையாட்டுப்போட்டியின் இறுதிநாளான்று பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியாவிற்கான துணைத் தூதுவர் திரு.ஏ.நடராஜன் , தினச்செய்தி’யின் பிரதம ஆசிரியர்.திரு.கே.ரீ.இராஜசிங்கம், இலங்கை உதைபாந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் திரு.அனுரா டி சில்வா மற்றும் சிறப்பு விருந்தினர்களான லவ்பேர்ட்ஸ் கோணரின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான திரு.இ. ஜெகதீஸ்வரன் , பான் ஏஷியா வங்கியின் பிராந்திய முகாமையாளர் (வடக்கு-கிழக்கு மாகாணம்) திரு.ஏ.வீ.பீடில் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.

Related Posts