யாழ்ப்பாணத்தின் நிலைமைகள் குறித்தும், அங்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியபோது தெரிவித்ததாவது:
பாடசாலை மாணவர்கள் பகிரங்க இடங்களில் மது அருந்துவதாக முறைப்பாடுகள் வந்துள்ளன. அவ்வாறான மாணவர்களை சாராயப் போத்தல்களும் கையுமாகக் கைது செய்ய வேண்டும். மாணவர்கள் பாடசாலை நேரத்தில் சீருடையில் வீதிகளில் காணப்பட்டால் அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மாணவிகளின் பின்னால் மாணவர்கள் கூக்குரலிட்டுச் செல்வதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு செல்பவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மாணவர்கள் இளைஞர்கள் சந்திகளிலும், மதகுகளில் கூடிநின்று கும்மாளம் அடிக்கும் செயல்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசேடமாக டியுட்டரிகளின் முன்னால் 4 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் மாணவிகளிடம் சில்மிசம் செய்யும் இளைஞர்ளையும், டியுட்டரறிகள் முன்னால் கூடி காதல் விவகாரம் என, மாணவிகளுக்குப் பாதுகாப்பு வழங்கிச் செல்பவர்களையும், அவர்களுடன் கோஸ்டியாக மோதல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்ய வேண்டும்.
விசேடமாக யாழ் நகரப்பகுதிகளில் கூட்டமாக கூக்குரலிட்டு மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் பவனி வருவது அவதானிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பாடசாலை மாணவ மாணவிகள், யுவதிகள் பொதுமக்கள் அச்சமடைய நேரிட்டுள்ளது. வீதிகளில் கூட்டமாக மோட்டார் சைக்கிள்களில் வெட்டி வெட்டி வேகமாக ஓடுவதனால், வாகன போக்குவரத்துக்கும் பொதுமக்களின் போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படுகின்றது. இவர்களைக் கண்ட இடத்தில் கைது செய்ய பொலிசார் தயங்கக் கூடாது. இவர்களைக் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலையில்லாமல் வெட்டியாக மோட்டார் சைக்கிள்களில் திரியும் இளைஞர்களிடம் ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு கைத்தொலைபேசி, கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி என்பனவே அவர்களின் சொத்தாக உள்ளது. இவைகள் மூன்றும் வெளிநாடுகளில் இரவு பகல் பாராது உழைக்கும் உறவுகளின் வியர்வை சிந்திய சம்பாத்தியத்தில் பெறப்பட்டவை.
ஆனால் இவர்கள் வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் தேவையில்லாமல் ஓடித்திரிகையில் தங்களை ஹீரோவாக கற்பனை செய்து கொள்கின்றார்கள். தொழில் இல்லாததால், வீட்டில் இவர்களின் நிலைமை ஸீரோ. இதன் வெளிப்பாடாகவே அவர்கள் 10 அல்லது 15 மோட்டார் சைக்கிள்களில் கூட்டமாக பாடசாலை விடும் நேரம், டியூட்டரிகளுக்கு மாணவிகள் செல்லும் நேரங்களில் வீதிகளில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் ஓடித்திரிகின்றார்கள். இந்த நிலைமை கட்டுப்படுத்தப்பட வேண்டும். இவர்களைக் கைது செய்து, அவர்களின் மோட்டார் சைக்கிள்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்தாலே யாழ் நகரத்தின் 90 வீதமான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.