தமிழ் மக்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான தாச்சி விளையாட்டுப் போட்டி அடுத்தாண்டு முதல் வடமாகாண மட்டத்தில் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே நடத்தப்படவுள்ளதாக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் த. குருகுலரசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அடுத்தாண்டு வட மாகாணத்தில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று வடமாகாண சபையின் கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் எஸ்.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
எமது பாரம்பரிய விளையாட்டுக்களையும் வளர்த்தெடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எமக்கு உண்டு. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தாச்சி விளையாட்டை வளர்த்தெடுக்கும் வகையில் ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளோம். அடுத்த ஆண்டு முதல் வடமாகாண பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாச்சி விளையாட்டை நடத்துவதுடன் இதனை மாவட்டம் மாகாணம் என கொண்டு செல்லவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.
இந்த போட்டிகளை பாடசாலை மட்டத்திலும் அறிமுகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.