‘என்னை அறிந்தால்…’ படத்தை அடுத்து ஏ.எம்.ரத்னம் மிக பிரமாண்டமான முறையில் அஜித்குமாரை வைத்து ஒரு புதிய படம் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. படத்துக்கு பெயர் சூட்டப்படாத நிலையில், இந்த படம் வேகமாக வளர்ந்து வந்தது.
படத்தின் பெயரை அறிந்து கொள்வதற்கு அஜித்குமார் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில், நேற்று இரவு அந்த படத்தின் பெயர் வெளியிடப்பட்டது. அந்த படத்துக்கு ‘வேதாளம்’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியானது. ‘வேதாளம்’ படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டுவர தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் திட்டமிட்டு இருக்கிறார்.
இந்த படத்தில் அஜித்குமார் ஜோடியாக சுருதிஹாசன் நடித்திருக்கிறார். அஜித்குமாரின் தங்கையாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்து இருக்கிறார். ‘சிறுத்தை’ சிவா டைரக்டு செய்திருக்கிறார். இவர் ஏற்கனவே அஜித்குமாரை வைத்து, ‘வீரம்’ படத்தை டைரக்டு செய்தவர்.