கத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் விரைவில் வெளிவரவுள்ள புலி திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தஞ்சை முதன்மை நீதிமன்றத்தில் அன்புராஜசேகர் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் அன்புராஜசேகர். இவர் தாகபூமி என்ற தன்னுடைய குறும்படத்தை பெரிய திரைப்படமாக வெளியிட காத்திருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் தன்னுடைய கதையை கத்தி என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டதாக இயக்குனர் முருகதாஸ் , தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் தனக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி அன்புராஜசேகர் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் ஜனவரி 23 ஆம் தேதி 5 பேரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் அன்றைய தினம் எதிர்தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இதன்பின்னர் இரண்டாவது முறையாக மீண்டும் வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்புராஜசேகர் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தன் வக்கீல் வடிவேல் மூலம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் “கத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவுள்ள புலி திரைப்படத்திற்கு தடைவிதிக்க வேண்டும்.
மேலும் இயக்குனர் முருகதாஸ் இனிமேல் இயக்கி தயாரித்து வெளிவரவுள்ள அனைத்து படங்களுக்கும் தடைவிதிக்க வேண்டும்” என அந்த மனுவில் கோரியிருந்தார்.
நேற்று மனு தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ராஜசேகர் வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு இயக்குனர் முருகதாஸ், நடிகர் விஜய் ஆகிய இரண்டு பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.