இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து, மனித உரிமைகள் பேரவையில் யோசனையொன்றை முன்வைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யுத்தத்தின் இறுதியின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடியறிவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தேசிய வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்படவிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.
அமெரிக்காவினால் முன்வைக்கப்படவிருக்கும் யோசனை எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை மனித உரிமைகள் பேரவையில் ஆற்றுப்படுத்தப்படவிருப்பதாக ஜெனீவா தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையிலான இந்த யோசனை, அமெரிக்கா- இலங்கை ஆகிய இரு நாடுகளும் இணைந்து முன்வைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த யோசனையில் விசேட கலப்பு நீதிமன்றம் (ஹைபிரிட் நீதிமன்றம்) தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையிலான அமெரிக்காவின் யோசனை அடங்கிய வரைவு, மனித உரிமை பேரவையின் 47 அங்கத்துவ நாடுகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
அந்த யோசனைக்கு ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.