இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்லமுடியாது என சுவிஸ் அமைதி அமைப்பினால் 18.9.2015 இல் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்
திரு.சுமந்திரன், திரு.சுரேன், சிங்கள வழக்கறிஞர் திரு.நிரன் மற்றும் தமிழ் அமைப்பினர், சுவிஸ் அரசாங்கத்தினர்,மே17 இயக்கம் , மனித உரிமை அமைப்பினர் சிங்கள சிவில் சமூகம் எனப்பலர் கலந்து கொண்ட உள்ளரங்க விவாதத்தில் கேள்விகளுக்கு சுமந்திரன், சுரேன், நிரன் ஆகியோர் பதிலளித்தனர்.
இதில் லதன் என்பவரால் கேட்கப்பட்ட கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றான, வடக்குமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான “இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ‘ குறித்தும் அது பற்றி இலங்கை பாராளுமன்றத்தில் விவாதிப்பார்களா? என்பதற்கு
சுமந்திரன் அங்கு பதிலளித்து கூறியதாவது “இனப்படுகொலை’ என்று பேசியதால் பல்வேறு விடயங்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறோம். இங்கு நடந்தது இனப்படுகொலை என்று முடிவு செய்வது அரசியல் அரங்கு அல்ல, மாறாக அது நீதிவிசாரணையிலேயே முடிவு செய்யப்படவேண்டும். மனித உரிமை ஆணையாளர் கூட அதை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்ளவில்லை. நான் ஒரு வழக்கறிஞர் என்பதால் எனக்கும் இதை இனப்படுகொலை என்று நிரூபிப்பதற்குரிய ஆதாரங்கள் இருப்பதாக தோன்றவில்லை. இதை நாம் இனப்படுகொலை என்று சொல்லமுடியாது. இதை கவனத்தில் எடுக்காமல் இனப்படுகொலை என்று பேசுவதால் நாம் இன்று பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். என்றார்.
திரு. லதன் தொடர்ந்து பேசும் பொழுதில் ’ வடக்கு மாகாண முதல்வர். விக்கினேசுவரன் உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்தவர், அவருக்கு புரிந்து தான் இனபடுகொலை என்று தீர்மானம் கொண்டுவந்தார்’ என்று பதிலளித்தார்.
அந்த நிகழ்வில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பளர் திருமுருகன் காந்தி முன்வைத்த வாதம் வருமாறு இருந்தது .
”தமிழகத்தில் இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும் இது பல்வேறு அரங்குகளில் இனப்படுகொலையா இல்லையா என்பதை விவாதித்தே இது இனப்படுகொலை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் எனது இனப்படுகொலை பற்றிய விசாரணை கோரிக்கை என்பது குற்றச்சாட்டு வகைப்பட்டது.
மக்கள் சமூகம் இக்குற்றச்சாட்டை முன்வைக்கிறது, இதை குறித்து விசாரணை செய்வதை எது தடுக்கிறது. இது பற்றிய விசாரணை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படவேண்டும். மேலும் ஆழமான சட்ட அறிவு கொண்டவர்கள் தமிழகத்தில் இதை இனப்படுகொலை என உறுதி கூறுகிறார்கள்..” என்றார்
திருமுருகன் காந்தி தனது முகப்புத்தகத்தில் இது பற்றி விசனத்தினை பின்வருமாறு பதிவுசெய்துள்ளார். ”தமிழர்களுக்குள் இருந்து ‘இனப்படுகொலை மறுப்பும், பொது வாக்கெடுப்பு மறுப்பு குரலும்’ வருகிறது என்பது மிக மோசமான அரசியல். ஒரு சிங்கள அதிகாரியின் குரலையே என்னால் திரு.சுமந்திரனிடம் காண முடிந்தது. இது மட்டுமல்லாமல் ‘பொதுவாக்கெடுப்பினைப் பற்றிய கேள்வியை எழுப்பிய பொழுதில், எங்கள் இருவருக்குமான விவாதம் அவரது விடுதலை எதிர்ப்பு நிலைப்பாட்டினை உணரமுடிகிறது.திரு.சுமந்திரனுக்கு எனது வலிமையான கண்டனத்தினை பதிவு செய்ய விரும்புகிறேன்.”
சுமந்திரனின் கருத்து குறித்து இது வரை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் எந்தக்கருத்தையும் இது வரை முன்வைக்கவில்லை.
இனப்படுகொலை பற்றிப் பேசுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னொருபொழுதும் இவ்வாறு கூறி சர்ச்சையினை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் இரண்டு வருடங்கள் முன்பாக 24.12.2013 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு – கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
வடக்கு மாகாணசபையில் விக்கினேஸ்வரனால் கொண்டுவரப்பட்ட இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என வலியுறுத்தும் தீர்மானத்தினை கடுமையாக சுமந்திரன் விமர்சித்தித்திருந்தமையும் குறி்ப்பிடத்தக்கது.