இலங்கையில் இடம்பெற்றுள்ள குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ள கலப்பு விசேட நீதிமன்றம் நாட்டுக்கு வெளியிலேயே அமைய வேண்டுமென்றும், இதில் சர்வதேச தரப்பினரே அதிகளவில் பங்கேற்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறள்கள், மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணையொன்றே நடத்தப்பட வேண்டுமென நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருந்தோம்.
இவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கடந்த கூட்டத் தொடர்களின்போது இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்தபோதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காது காலம் கடத்தி வந்தது.
இந் நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 28 ஆவது கூட்டத் தொடரின்போது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தும் வகையில் அமெரிக்கா தீர்மானத்தை கொண்டு வந்தது. அதற்கு சர்வதேச நாடுகளும் ஆதரவளித்திருந்தன.
இந் நிலையிலேயே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இலங்கையில் இடம்பெற்ற பாரிய குற்றங்கள் மீறல்கள் தொடர்பாக சாட்சியங்கள் பெறப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டிருந்தன.
கடந்த மார்ச் மாதம் இந்த அறிக்கை வெ ளியிடப்படுவதாக இருந்தபோதும் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து புதிய ஆட்சியாளர்களின் கோரிக்கைக்கமைய அவ்வறிக்கை வெளியிடுவது பிற்போடப்பட்டது.
இவ்வாறான நிலையில் இங்கு பொதுத் தேர்தலொன்று இடம்பெற்று கூட்டரசாங்கம் அமைந்தது. எனினும் புதிய அரசாங்கமும் சர்வதேச விசாரணையையோ அல்லது சர்வதேச நியமங்களின் கீழான உள்ளக விசாரணையையோ ஏற்றுக் கொள்ள முடியாதென அழுத்தந் திருத்தமாக அறிவித்திருந்தது.
இவ்வாறான நிலையில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் மூன்றாம் நாளான நேற்று முன்தினம் இலங்கையில் இடம்பெற்ற விடயங்கள் குறித்தான ஐ.நா. மனித உரமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனால் வெளியிடப்பட்டது.
அவ்வறிக்கையில் முழுமையான சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென்ற ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாமை ஏமாற்றமளிப்பதாகவுள்ளது.
எனினும் அந் அறிக்கையில் மிக முக்கியமாக இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் கலப்பு விசேட நீதி மன்றம் அமைக்கப்பட்டு சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச, தேசிய நீதிபதிகள் சட்டத்தரணிகள் விசாரணையாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளக விசாரணையூடாகவே தமிழர்களுக்கு நீதி வழங்குவோமென அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மேற்குறித்த முறைமையூடாக எமக்கு ஓரளவேனும் நீதியை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும் குறித்த கலப்பு விசேட நீதிமன்றமானது இலங்கைக்கு வெளியிலுள்ள நாடொன்றிலேயே அமைக்கப்பட வேண்டும். காரணம், போரின்போது குற்றமிழைத்தவர்கள் கட்டளையிட்டவர்கள் தொடர்பாக குறித்த நீதிமன்றத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது அந் நீதிமன்றம் உள் நாட்டில் அமைந்திருக்கும் பட்சத்தில் பல்வேறு அக புற அழுத்தங்களுக்கு உட்பட வேண்டிய நிலை நிச்சயம் ஏற்படும்.
ஆகவே இலங்கை அல்லாத நாடொன்றில் அந் நீதிமன்றம் அமைவதே பொருத்தமானது. அதேநேரம் கலப்பு முறையென கூறப்பட்டிருப்பதால் அந் நீதிமன்றத்திற்கான நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள், தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலுமாக 50 க்கு 50 என்ற விகிதாசாரத்திலேயே தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இந் நிலையில் தேசிய ரீதியில் உள் நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் சட்டத்தரணிகள் விசாரணையாளர்கள் இடம்பெறுவதால் முழுமையான நியாயமான விசாரணை இடம்பெறுமென்றோ அல்லது சுயாதீனமாக அவ் விசாரணை அமையுமென்றோ எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக வெற்றி வீரர்களாக காட்டப்பட்டுள்ள இராணுவத்தினரை, யுத்த வெற்றி யுக புருஷர்களாக சித்திரிக்கப்படுபவர்களை ஒருபோதும் தண்டிப்பதற்கு இலங்கையை சேர்ந்த தரப்பினர் விரும்பமாட்டார்கள்.
ஆகவே கலப்பு விசேட நீதிமன்றத்தில் அதிகளவான சர்வதேச தரப்பினரையே உள்ளீர்க்க வேண்டும். அதனூடாகவே இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஓரளவேனும் நீதியை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
மேலும் இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இக் கூட்டத்தொடரில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் பங்கேற்றுள்ள அனைத்து தரப்பினரும் இவ் விடயத்தை பேரவையின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டியது அவசியமாகும் என்றார்.