ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்த, ஊடக நிறுவனங்களின் பிராணிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
இதில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு பாரிய சிக்கலில் இருந்து விடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வௌியிடும்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் பாரதூரமான எந்தவொரு விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் தீர்வு காண்பதற்கு இணங்கியுள்ளோம். இவற்றையும் ஊடகங்கள் மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.
இதேநேரம் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் தொடர்ந்து இருந்திருந்தால் கடுமையான விளைவுகளை நாடு சந்தித்திருக்கும் என்றார்.
நாடு பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
எனினும் இந்த அரசாங்கத்தினால் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் ஏற்படவிருந்த பாரிய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
நாடு தற்பொழுது பயங்கர நிலையிலிருந்து விடுபட்டிருப்பதனால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இது எமது நாடு. நாம் ஒருபோதும் நாட்டைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்றார்.
அடுத்த கட்டமாக நாங்கள் முயற்சிப்பது என்னவென்றால், ஜெனிவாவில் இலங்கை தொடர்பாக காணப்படக்கூடிய அவப்பெயர் கொண்ட நிகழ்ச்சி நிரல் ஒன்று இருப்பதை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே எமது இப்போதைய தேவை என்றார்.