அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்ட இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹெல ஜயவர்தன ஆகியோரை, துறைமுக அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவருமான அர்ஜூன ரணதுங்க கடுமையாக சாடியுள்ளார்.
நேற்றைய தினம் நிட்டம்புவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இவ்வாறு கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.
நீண்ட காலத்திற்கு சங்காவும் மஹலவும் துடுப்பாட்ட வரிசையில் முன்னணியில் விளையாடி வந்தனர். இதனால் இளம் வீரர்களுக்கு போதியளவு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதுவே தற்போது இளம் வீரர்களினால் ஜொலிக்க முடியாமைக்கான காரணமாகும்.
நான் விளையாடிய காலத்தில் முதலில் நான்காவதாக ஆடி பின்னர் இறுதிக் காலங்களில் ஏழாவதாகவே ஆடியிருந்தேன்.
தற்போது கிரிக்கெட் வீரர்களின் ஒழுக்கம் பற்றி திருப்தி அடைய முடியாது. சங்கா மூன்றாதாகவும், மஹல நான்காவதாகவும் நீண்ட காலம் துடுப்பெடுத்தாடியிருந்தனர்.
இளம் வீரர்கள் தங்களை ஸ்தாபித்துக் கொள்ள இவர்கள் இருவரும் சநத்ர்ப்பம் வழங்கவில்லை. இந்த நிலைமக்கு கிரிக்கட் நிர்வாகமும் பொறுப்பு சொல்ல வேண்டும்.
நாட்டை முதனிலைப்படுத்தியே விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.
பணத்தையும் ஏனைய நலன்களையும் முதன்மைப்படுத்தக் கூடாது என அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்த விமர்சனம் தொடர்பில் தற்போது இங்கிலாந்தின் பிராந்திய போட்டிகளில் பங்கேற்று வரும் மஹல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார இதுவரையில் கருத்து எதனையும் வெளியிடவில்லை.
இதற்கு முன்னரும் அமைச்சர் ரணதுங்க மஹல, சங்கா ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.