ஆர்.பி. ரவி இயக்கத்தில் உருவாகியுள்ள படம், தற்காப்பு. இயக்குநர் வாசுவின் மகன் சக்தி தனது பெயரை சக்திவேல் வாசு என்று இந்தப் படத்தில் இருந்து மாற்றிக்கொண்டுள்ளார்.
தற்காப்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது:
ஒரு படம் தோற்றுவிட்டால் 50 குடும்பங்கள் தோற்றுவிடும். ஒரு கலைஞனுக்குச் சுதந்திரம் தேவை. படத் தணிக்கையின்போது சில வார்த்தைகளை நீக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். இதனால் எங்களுக்குச் சுதந்திரம் இல்லை. பிசாசு படத்தைப் பற்றி ஒன்று சொல்லப்போகிறேன். இதனால் என் அடுத்தப் படத்துக்கு ஏ கொடுத்தாலும் பரவாயில்லை. ஏனென்றால் என் அடுத்தப் படம் ஏ படம் தான். க்ரைம் திரில்லர். தயவு செய்து பெண்கள் எல்லாம் வரவேண்டாம்.
சினிமாவைப் பற்றிய தவறான எண்ணம் உள்ளது. படத்தைக் குழந்தைகளுடன் பார்க்கவேண்டும் என்று. சினிமாவை குழந்தைகளுடன் பார்க்கக்கூடாது. அதற்கான மீடியம் அல்ல சினிமா. கார்ட்டூன்தான் குழந்தைகளுடன் பார்க்கவேண்டும். திரையரங்கில் பார்க்கப்படும் சினிமா, அடல்ட் மீடியம். பெரியவர்கள் பார்க்கும் படம். குழந்தைகளுடன் யாரும் திரையரங்குக்கு வரவேண்டாம். மை டியர் குட்டிச்சாத்தான் படத்துக்கு வேண்டுமானால் குழந்தைகளுடன் வரலாம். டைட்டானிக் படத்தில் கூட முத்தக்காட்சி உள்ளது.
சென்சாரில் இது குழந்தைகளுடன் பார்க்கமுடியாது என்கிறார்கள். என் படத்துக்குக் குழந்தைகளுடன் வராதீர்கள். பிசாசு படம் பார்த்துவிட்டு சொன்னார்கள், படம் அருமையாக உள்ளது. ஆனால் பிசாசு இருக்கிறது என்றார்கள். பிசாசை மோசமாகச் சித்தரித்துதான் படங்கள் வந்துள்ளன. ஆனால் பிசாசு ஒரு தெய்வம், தெய்வத்துக்கு ஒருபடி மேல். பிசாசைப் பார்த்தால் பயப்படவேண்டாம், என்று ஒரு படம் எடுத்தேன். ஆனால் படத்தில் பிசாசு வந்துவிட்டது, அதனால் ஏ சான்றிதழ் என்றார்கள். இதனால் (இயக்குநர்) பாலாவிடம் திட்டுதான் வாங்கினேன். தணிக்கைக்கு என்று ஒரு பொறுப்பு உள்ளது. கதையை எழுதும்போதும், காட்சியாக எடுக்கும்போதும் எண்ணியதுபோல செய்யமுடியவில்லை. சுதந்தரிம் இல்லாவிட்டால் அது என்ன கலை?
வெற்றிமாறனின் விசாரணை படத்துக்கு வெனீஸ் படவிழாவில் விருது கிடைத்துள்ளது. அந்தப் படம் பாருங்கள். மிகச்சிறந்த படம். இந்திய சினிமாவில் யாரும் கையால் தொடாத ஒரு பகுதியை அவர் படமாக எடுத்துள்ளார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் எல்லாம் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை எவ்வளவு போர் அடிக்கும்? சினிமா நம் வாழ்க்கையில் முக்கியமானது என்றார்.