Ad Widget

தற்கொலைக்கு முயன்ற இலங்கை அகதி – திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்!

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறையில் இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வேறு சிறை முகாம்களில் இருந்து மாற்றப்பட்ட 15 பேர் உள்ளனர்.

இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடிக்கடி முகாம் சிறைகளில் உள்ளவர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் முகாம் சிறையில் உள்ள யுகப்பிரியன் (வயது 30) என்ற வாலிபர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது என தமிழக ஊடகமான மாலை மலர் செய்தி வௌியிட்டுள்ளது.

அவரை சிறை பொலிசார் மீட்டு திருச்சி அரச வைத்தியசாலையில் நேற்று நள்ளிரவு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை தேறி உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையே திருச்சி மத்திய சிறை அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இளைஞருக்கு 20 தூக்க மாத்திரைகள் மொத்தமாக கிடைத்தது எப்படி? என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகாம் சிறைகளில் உள்ள அவர்களை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சிறை வைத்தியசாலை வைத்தியர்கள் சென்று பரிசோதனை செய்வது வழக்கம். அப்போது கைதிகள் தூக்கம் வரவில்லை என்று கூறினால் கூட இரண்டு மாத்திரைகள் மட்டுமே வைத்தியர்கள் வழங்குவார்கள்.

ஆனால் 20 தூக்க மாத்திரைகள் யுகப்பிரியனுக்கு கிடைத்து எப்படி என்பது மர்மமாக உள்ளது. கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் மூலம் மாத்திரைகள் கடத்தப்பட்டதா? அல்லது சிறை துறை வைத்தியர்களின் கவனக் குறைவா? என்பது சந்தேகமாக உள்ளது.

இது குறித்து கே.கே.நகர் பொலிசார் மற்றும் திருச்சி விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் முகாம் சிறைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

Related Posts