‘முஹம்மட்: மெஸெஞ்சர் ஆஃப் காட்’ படம் தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டவர்கள் மீது மும்பையைச் சேர்ந்த ரஸா அகாதெமி என்ற அமைப்பு ஃபத்வா விதித்துள்ளது.
இந்தப் படத்தின் இயக்குனர் மஜித் மஜிதி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்பட இந்தத் திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கு எதிராகவும் இந்த ஃபத்வா விதிக்கப்பட்டுள்ளது.
சாதாரண சித்திரங்கள் குறித்தே இஸ்லாம் கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் நிலையில், முகமது நபி குறித்தே திரைப்படம் எடுப்பது மிகத் தவறானது என அந்த ஃபத்வா கூறியுள்ளது.
இந்தத் திரைப்படம் இஸ்லாமிய மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் மதத்தைக் கேலி செய்வதாக இருப்பதாகவும் குறிப்பிடும் அந்த ஃபத்வா, உலக முஸ்லிம்கள் அனைவரும் இந்த திரைப்படத்திலிருந்து விலகியிருக்கும்படி கோரியிருக்கிறது.
இந்தப் படத்திற்கு எதிராக எல்லா இஸ்லாமியர்களும் தனிப்பட்ட முறையிலும் சட்டரீதியாகவும் போராட வேண்டுமென அந்த ஃபத்வாவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய ரஸா அகாதெமியின் துணைத் தலைவர் மன்சூர் ஆலம் ஷேக், இந்தப் படத்திற்கு தடை விதிக்க அரசைக் கோரப்போவதாகத் தெரிவித்தார்.
“ஏ.ஆர். ரஹ்மான் இஸ்லாமியராக இருந்தும் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கிறார். முகமது நபியின் குழந்தைப் பருவம் குறித்துவரும்போது, அவரது உருவத்தை படத்தில் காட்டுகிறார்கள். இது ஏற்க முடியாதது” என மன்சூர் ஆலம் ஷேக் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து, இந்தப் படத்திற்கு இந்தியாவில் தடை கோரப் போவதாக ரஸா அகாதெமி அமைப்பு தெரிவித்துள்ளது.