புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் அச்சுறுத்தல்

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போரளிகள் மீண்டும் புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்காக அழைக்கப்படுவது விசனத்தை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தத்தின் பின் ஸ்ரீலங்கா அரசிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் புனர்வாழ்வு நிலையங்களில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் குடும்பங்களுடன் இணைந்து வாழ்ந்துவரும் நிலையில் அண்மைக்காலமாக திடீரென மறைமுகமாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

எனினும் ஆட்சி மாற்றத்தின் பின் விசாரணைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறைவடைந்து காணப்பட்டன.

ஆனால் தற்போது மீண்டும் முன்னாள் போராளிகள் புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளனர்.

இதனால் அவர்களும், அவர்களுடைய குடும்பங்களும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தமாறு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளேன்.அதில் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்படும் நிலை இல்லாதொழிக்கப்பட வேண்டும்.மீண்டும் மீண்டும் அவர்கள் புலனாய்வுத் துறையினரினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்கள் இல்லாதொழிக்கப்படுவதுடன் அவர்கள் நிம்மதியாக வாழ வழி ஏற்படுத்த வேண்டும்.

எனவே புலனாய்வுத்துறையினரின் விசாரணைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் முன்வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts