இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை குழுவின் அறிக்கை இன்று(திங்கட்கிழமை) தொடங்கும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில் இலங்கை ராணுவம் மனித உரிமைகளை மீறிவிட்டதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டின. அப்போதைய அதிபர் ராஜபக்சே விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டினார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஒரு விசாரணை குழுவை நியமித்தது. இதை ராஜபக்சே ஏற்க மறுத்ததுடன் ஐ.நா. விசாரணை குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கவும் இல்லை.
கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி கண்டார். புதிய அதிபராக சிறிசேனா பதவி ஏற்றார். அவர் விசாரணை குழுவை ஏற்றுக்கொண்டார். இதனிடையே, ஐ.நா. விசாரணை குழு கடந்த மார்ச் மாதம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்தது.
ஆனால், விசாரணை குழு தனது அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிடம் தாக்கல் செய்வதற்கு மேலும் 6 மாத கால அவகாசம் அளிக்குமாறு சிறிசேனா கேட்டுக் கொண்டார். இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலும் ஒப்புக்கொண்டது.
இதைத்தொடர்ந்து ஐ.நா. விசாரணை குழு திட்டமிட்டவாறு தனது விசாரணை அறிக்கையை தயாரித்து அதன் நகலை கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை அரசிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கை குறித்து பதில் அளிக்க இலங்கை அரசுக்கு 5 நாட்கள் அவகாசமும் தரப்பட்டது.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.
இந்த தொடரில் ஐ.நா. விசாரணை குழு தனது அறிக்கையை தாக்கல் செய்கிறது. அத்துடன் இலங்கை அரசின் பதில் அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த அறிக்கைகளின் அடிப்படையில்தான் இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேச நடத்தப்படுமா? அல்லது இலங்கை அரசே இதுபற்றி விசாரணை நடத்திக் கொள்ளலாமா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
எனினும் இலங்கையில் மனித உரிமைகள் மீறப் பட்டது. தொடர்பாக அமெரிக்கா புதிய தீர்மானம் கொண்டு வர இருப்பதால் சர்வதேச விசாரணை என்கிற கோரிக்கை நீர்த்துப் போய்விடும் என்று கருதப்படுகிறது.
இது பற்றி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் ஜோகிம் ருக்கெர் கூறுகையில், “விசாரணை குழு அதிகாரி சையத் ராஅத் அல் இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் முடிவுகளை அறிக்கையாக மனித உரிமைகள் கவுன்சிலிடம் தாக்கல் செய்வார். இந்த தொடரின்போது, காங்கோ, இலங்கை, மற்றும் உக்ரைன், சிரியா ஆகிய நாடுகள் பற்றி மீண்டும் பேசப்படும்” என்றார்.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் இலங்கை பிரச்சினை தவிர, சிரியா, ஏமன், சூடான் நாடுகளின் பிரச்சினைகள், மரண தண்டனை மற்றும் உள்நாட்டு, அகதிகளின் உரிமைகள், அமைதிக்கான உரிமை ஆகியவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை வெளியறவு மந்திரி மங்கள சமரவீரா, சுகாதார மந்திரி ரஜித சேனரத்னா ஆகியோர் ஜெனீவா சென்று உள்ளனர். இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதில் கலந்து கொள்கிறது.