இலங்கையில் அரச படைகளினால் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துவிடப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் அயராது பாடுபடுவோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“தமிழர் நீதிக்கான கூட்டமைப்பின் குரல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை அமைந்துள்ள ஜெனிவாவில் மட்டுமல்ல உலக நாடுகள் எங்கும் ஓங்கி ஒலிக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
“ஜெனிவா அமர்வில் வெளியிடப்படவுள்ள ஐ.நா. விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை சர்வதேச சமூகத்தின் ஈடுபாட்டுடன் நடைமுறைப்படுத்தவேண்டும் எனக் கூட்டமைப்பு வலியுறுத்தும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 30ஆவது கூட்டத் தொடர் நாளை 14ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரின் போது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச விசாரணையின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனால் இந்தக் கூட்டத் தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீர தலைமையிலான இலங்கை அரசின் உயர்மட்டக் குழுவினர் நேற்று அதிகாலை ஜெனிவா பயணமாகியுள்ளனர். அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தலைமையிலான கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள் அடங்கிய குழுவினரும் நேற்று அதிகாலை ஜெனிவாவுக்குச் சென்றுள்ளனர்.
ஜெனிவா பயணமாக முன் அந்தப் பயணம் தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய குறுகிய செவ்வியிலேயே கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
அந்தச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“ஐ.நா. விசாரணை அறிக்கையின் பிரதி இலங்கை அரசிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை எதிர்வரும் 16ஆம் திகதி ஜெனிவாக் கூட்டத் தொடரில் வைத்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில், ஐ.நா. விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை இலங்கை அரசு அமுல்படுத்தவேண்டும் என வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை அமெரிக்கா இந்த ஜெனிவா அமர்வில் கொண்டுவரவுள்ளது.
ஆனால், ஐ.நா. விசாரணை அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை உள்ளக விசாரணைப் பொறிமுறையூடாக நிறைவேற்ற வேண்டும் என்ற பிடிவாதத்தில் இலங்கை அரசு உள்ளது. எனினும், ஐ.நா. விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை சர்வதேச சமூகத்தின் ஈடுபாட்டுடன் நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம்.
இதனை ஐ.நா. உறுப்பு நாடுகளிடம் எடுத்துரைப்போம். போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விடயத்திலிருந்து இலங்கை அரசு ஒருபோதும் தப்பமுடியாது” – என்று கூறியுள்ளார்.