எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சம்பந்தனை நீக்கிவிட்டு குமாரவெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தே தீருவோம். அதில் விட்டுக் கொடுப்பிற்கு இடமில்லை. நாம் விட்டுக்கொடுக்கவும்மாட்டோம் என்று பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில் சபாநாயகரை சந்தித்து பேச்சு நடத்தியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தினேஷ் குணவர்த்தனவும் விமல் வீரவன்சவும் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். இதுதொடர்பாக மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிடுகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருக்கின்ற எமது அணியில் அதிகமான எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்களை விட எமது அணியில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
எனவே எமது அணிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கவேண்டும். இந்த விடயம் தொடர்பில் நாங்கள் கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து பேச்சு நடத்தினோம். இதன் போது எமது பக்க நியாயம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்கே கிடைக்கவேண்டும் என்பது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடினோம். இந்த விவகாரத்தில் எமது பக்கத்தில் நியாயம் இருப்பதை சந்திப்பின்போது சபாநாயகர் கருஜயசூரிய உணர்ந்து கொண்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சித் தலைவரை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் நாம் தொடர்ந்து ஈடுபடுவோம். அதில் விட்டுக்கொடுப்பிற்கு இடமில்லை. நாம் விட்டுக்கொடுக்கவும் மாட்டோம். எதிர்வரும் வாரத்திலும், சபாநாயகரை சந்தித்து மேலும் விடயங்களை முன்வைப்போம். சபாநாயகரின் தீர்ப்பை நாம் சவாலுக்கு உட்படுத்த மாட்டோம். ஆனால் எமக்கு நியாயம் கிடைக்கவேண்டும். நியாயமற்ற முறையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நாங்கள் பெற்றுக்கொள்ளும் வரை எமது முயற்சிகளை தொடருவோம்.
இப்போதிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளை இணைத்தாலும் கூட எமது எண்ணிக்கையளவில் வராது. ஆகவே எமது அணியினர் தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும். சம்பந்தனை நீக்கிவிட்டு எமது அணியினர் சார்பில் குமார் வெல்கமவை நியமிக்க வேண்டும் அதை தொடர்ந்தும் நாம் வலியுறுத்துவோம். அதேபோல் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது நாம் எதிர்க்கட்சியாக செயற்பட அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம் எனக் குறிப்பிட்டார்.