மங்கள தலைமையில் ஜெனிவா பறந்தது அரச குழு!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீர தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று சனிக்கிழமை அதிகாலை ஜெனிவா பயணமாகியுள்ளனர்.

ஜெனிவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நாளைமறுதினம் திங்கட்கிழமை உரையாற்றவுள்ளதுடன், ஐ,நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் – ஹுசேனை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பேரவையின் சர்வதேச விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து உள்ளகப் பொறிமுறையூடாக விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசு இணங்கியுள்ள நிலையில், இதற்கு முன்னர் சர்வதேச விசாரணை என்ற நிலைப்பாட்டிலிருந்த அமெரிக்கா, இலங்கை அரசின் உள்ளகப் பொறிமுறைக்கு ஆதரவளிப்பதாகவும், அதற்காக இலங்கைக்கு சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை பிரேரணையொன்றை நிறைவேற்றவுள்ளதாகவும், கடந்தமாதம் இலங்கை வந்திருந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்றன என்று கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டி அவற்றின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி ‘இலங்கை நீதிக்கான தேடல்’ (ஸ்ரீலங்கா தி சேர்ச் போ ஜஸ்டிஸ்) என்ற ஆவணப்படத்தை நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் பங்கேற்க வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழு ஜெனிவா சென்றுள்ளது.

இதுதொடர்பாக நேற்று தகவல் வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே, “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இதில், கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழு நாளை (இன்று) அதிகாலை ஜெனிவா செல்லவுள்ளது.

இந்தக் குழுவில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவும், நீதி மற்றும் வெளிவிவகார அமைச்சுகளின் உயர் அதிகாரிகளும், மேல் மாகாண ஆளுநரும் இடம்பெறுகின்றனர்.

ஜெனிவா செல்லும் வெளிவிவகார அமைச்சர் மங்கள, 14ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளார். அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் – ஹுசேனையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்துவார். 14ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றியதையடுத்து, அமைச்சர் மங்கள சமரவீர, புதுடில்லி வரவுள்ளார். அங்கு அவர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துகொள்வார்” – என்று தெரிவித்துள்ளார்.

Related Posts