இசைப்பிரியா பற்றிய கதை ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடை!

இசைப்பிரியா பற்றிய ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்’’ என்று அந்த படத்தின் டைரக்டர் கணேசன் கூறினார்.

porkkalaththil-ori-poo-2

இலங்கையில் பத்திரிகையாளராக இருந்த தமிழ் பெண் இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கருவாக வைத்து, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படம் தயாரிக்கப்பட்டது. இசைப்பிரியாவாக தான்யா நடித்து இருக்கிறார். இளையராஜா இசையமைத்து இருக்கிறார். கு.கணேசன் டைரக்ஷனில், குருநாத் சலதானி தயாரித்து இருக்கிறார்.

இந்த படத்துக்கு தணிக்கை குழு சான்றிதழ் கொடுக்க மறுத்து தடை விதித்து இருக்கிறது. இதுதொடர்பாக படத்தின் டைரக்டர் கு.கணேசன் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘‘என் பூர்வீகம், தமிழ்நாடு. வசிப்பது, பெங்களூருவில். 6 கன்னட படங்களை டைரக்டு செய்திருக்கிறேன். முதன்முதலாக நான் டைரக்டு செய்த தமிழ் படம், ‘போர்க்களத்தில் ஒரு பூ’. இலங்கையில், ஊடகவியலாளர் இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை உலகுக்கு காட்டும் விதமாக ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தை இயக்கினேன்.

இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் என்னை இந்த படத்தை இயக்க தூண்டியது. இந்த படத்தை முதன் முதலாக கடந்த மே மாதம் தணிக்கைக்கு அனுப்பினேன். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தை திரையிட அனுமதி மறுத்தார்கள்.

அதைத்தொடர்ந்து படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பினேன். மறுதணிக்கை குழுவின் தலைவராக இருந்த எஸ்.வி.சேகரும், தமிழ்நாடு தணிக்கை குழு அதிகாரி பழனிச்சாமியும் படத்தை பார்த்துவிட்டு, அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்கள்.

அதன்பிறகு படத்தை டெல்லிக்கு அனுப்பினேன். அங்கு சில காட்சிகளை நீக்க சொன்னார்கள். அவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கிவிட்டு, மீண்டும் அனுமதி கோரி படத்தை அனுப்பினேன். இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காட்சியை நீக்க சொன்னார்கள். அதற்கு நான் மறுத்ததால் மீண்டும் படத்துக்கு அனுமதி சான்றிதழ் கொடுக்க மறுத்து, படத்துக்கு தடை விதித்து விட்டார்கள்.

இந்த படம், தமிழ் ஈழத்தை நியாயப்படுத்துவதாக-விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக இருப்பதாகவும், படத்தை வெளியிட்டால் இந்தியா-இலங்கை உறவு பாதிக்கும் என்றும் தணிக்கை குழுவினர் கூறுகிறார்கள்.

இதை எதிர்த்து, நான் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்து இருக்கிறேன்’’.

இவ்வாறு டைரக்டர் கு.கணேசன் கூறினார்.

porkkalaththil-ori-poo-1

Related Posts