அரசியல் கைதிகளின் உரிமை மீறல்: உடன் விடுதலை செய்க!

பல வருட காலமாக வழக்கு எதுவும் இன்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கபே மற்றும் இலங்கை மனித உரிமை கேந்திரம் ஆகியன கோரிக்கை விடுத்துள்ளன.

சட்டமா அதிபர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கபே மற்றும் இலங்கை மனித உரிமை கேந்திரம் ஆகிய அமைப்புக்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

இந்த அமைப்புகளின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வழக்கு தொடர்ந்து, தொடராது 273 அல்லது அதற்கும் அதிகமானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 6,7 வருடங்களாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ள போதும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 5 பேர் சுமார் 18 வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரு நபருக்கு எதிராக மேல்நீதிமன்றில் 17 வருடங்கள் வழக்கு விசாரணை இடம்பெறுகிறது. வழக்கு தாக்கல் செய்வதற்கு முன் 15 வருங்கள் சிறையில் உள்ள அரசியல் கைதியும் இதில் உள்ளார். 2006ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் 2015வரை வழக்கு தாக்கல் செய்யப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நியாயமான வழக்கு விசாரணைக்கு உள்ள உரிமை இந்த நபர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையை முடிவுக்கு கொண்டுவர அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காக சிறைப்படுத்தப்பட்டுள்ள கைதிகள் பலர் தமது வாழ்நாளில் பாதியை இழந்துவிட்டனர். இவர்கள் தொடர்பில் சட்ட விதிமுறைகள் கையாளப்பட வேண்டும்.

Related Posts