யாழ்.கைதடியில் அன்னம்மா ஆலயத்திற்கருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து படையினர் பாரிய படைமுகாமொன்றை பிரதேச மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமைத்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சுமார் 30 பரப்புக் காணியில் புதிய படைமுகாம் அமைக்கும் பணிகளை படையினர் கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் சுமார் 7 பரப்பு காணிக்கான உரிமையாளர்கள் அந்தப் பகுதியிலேயே இருக்கின்றனர். ஏனைய காணிக்கு உரிமையானவர்கள் வெளியே இருக்கின்றனர்.
இந்த நிலையில் அந்த காணிகள் அரசாங்கத்திற்குரியவை என்ற பெயரில் அந்தப் பகுதியில் புதிதாக படைமுகாம் அமைக்கும் பணி இடம்பெற்று வருகின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தப் பகுதியில் தற்காலிகமாக இருப்பதைப் போன்று வேலிகளைப் போட்டுக் கொண்டு படையினர் தங்கியிருந்தனர்.
பின்னர் திடீரென்று முற்றிலும் உயரமாக வேலியை போட்டு மறைத்துக் கொண்டு அந்தப் பகுதியில் படையினருக்கான நிரந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் பிரதேச மக்கள் திரண்டு காணிகள் தமக்குரிவை என முறையிட்டுள்ளனர். எனினும் குறித்த காணிகள் அரசாங்கத்திற்குச் சொந்தமானவை என படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பிரதேச மக்கள் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.
எனினும் அது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாதென அவர்கள் தெரிவித்து விட்டதாக மக்கள் கூறியிருக்கின்றனர்.