தெல்லிப்பழை பிரதேசத்தில் முறையற்ற கர்ப்பம் மற்றும் பிரசவம் என்பன இடம்பெற்றன. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படவில்லை. இதுவரையில் 30 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி பா.நந்தகுமார் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம், மாவட்டச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (10) நடைபெற்றபோது இவர் இவ்வாறு கூறினார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் காங்கேசன்துறை, தெல்லிப்பழை, இளவாலை ஆகிய பொலிஸ் நிலையங்களில் 30 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முறைப்பாடுகள் செய்யப்பட்டும், அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பல பெண்களை ஒரு நபரே கர்ப்பம் தரிக்க வைத்துள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
முறையற்ற கர்ப்பம் மற்றும் பிரசவங்களினால் அந்தப் பெண்கள் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். இது கடந்த 2 வருடங்களாக இடம்பெற்று வருகின்றது என்றார்.
இது தொடர்பில் அங்கு பிரசன்னமான காங்கேசன்துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவர் பதிலளிக்கையில்,
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஒரு முறைப்பாடு தொடர்பில் முழுமையான விசாரணை செய்து, நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். தொடர்ந்தும் புலன் விசாரணை செய்து வருகின்றோம் எனவும் பதிலளித்தார்.
இது தொடர்பில் நேரடியாக எங்களுக்கு தெரிவித்தால், உடனடி விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வி.கே.பெரேரா தெரிவித்தார்.