Ad Widget

ஹங்கேரியில் குழந்தையுடன் ஓடிய அகதியை கீழே தள்ளிய பெண் வீடியோகிராபர் பணிநீக்கம்

ஹங்கேரியில் குழந்தையுடன் ஓடிய சிரியா அகதியை கீழே தள்ளிய பெண் வீடியோகிராபரை செய்தி சேனல் பணிநீக்கம் செய்து உள்ளது.

Hungary-camerawoman-fired-for-kicking-refugee_SECVPF

சிரியாவின் உள்நாட்டுப்போர், அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விட்டது. அவர்களில் பலரும் தங்கள் மீதியான வாழ்க்கையை கழித்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமான நிலையில், அண்டை நாடான துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள்.
சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஹங்கேரிக்கு அகதிகளாக சென்று, அங்கிருந்து அவர்கள் ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு செல்ல விரும்பினர். ஆனால் அந்த நாடுகள் அவர்களை ஏற்கவிரும்பவில்லை.

இந்த நிலையில்தான் அய்லான் என்ற பிஞ்சுக்குழந்தையின் உடல் துருக்கியில் கடல் கரைஒதுங்கி, அது தொடர்பான படம் ஊடகங்களில் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதனையடுத்து அகதிகள் பிரச்சனையில் ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாட்டிலும் சற்று மாற்றம் வந்தது. இந்த நிலையில், ஹங்கேரியில் தவித்துக்கொண்டிருந்த அகதிகளை ஏற்பதற்கு ஆஸ்திரியாவும், ஜெர்மனியும் முன்வந்தது. ஹங்கேரியில் இருந்து வரும் அகதிகளுக்காக ஆஸ்திரியா, ஜெர்மனியில் எல்லைகள் திறக்கப்பட்டது. ஹங்கேரி எல்லையோர கிராமங்களில் சிரியா மக்கள் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

எல்லையில் குவிந்து இருக்கும் அகதிகளை கணக்கெடுக்கும் பணியினை அந்நாட்டு போலீசார் நடத்தினர். இதுதொடர்பான செய்திகளை சேகரிக்க ஹங்கேரி பத்திரிக்கையாளர்கள் குவிந்தனர். அவர்கள் வீடியோவும் எடுத்தனர். அப்போது சிரியாவை சேர்ந்த அகதி ஒருவர் தனது குழந்தையுடன் ஓடிச்சென்றார். அப்போது படம் எடுத்துக் கொண்டு இருந்த உள்ளூர் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் வீடியோகிராபர், அகதியை காலை இடறி கீழே விழச்செய்தார். பின்னர் அகதியை காலால் தாக்கினார். இதனை அங்கு செய்தி சேகரித்த மற்றொரு தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர் படம்பிடித்து செய்தி வெளியிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு நடந்துக் கொண்ட பெண் வீடியோ கிராபரை சமூக வலைதளங்களில், பயனாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். நீ எல்லாம் பெண்ணா? என்று பலர் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தனர். இந்நிலையில் சிரியா அகதியை தாக்கிய பெண் வீடியோகிராபரை நீக்குவதாக சம்பந்தப்பட்ட தொலைக் காட்சி சேனல் அறிவித்து உள்ளது.

Related Posts