யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான சிறுவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு புதிய அமைச்சின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.எனவே இந்தப்பணியினை உரிய வகையில் நான் மேற்கொள்வதுடன் தேசிய ரீதியிலும் செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சராக அவர் செய்தியாளர்களிடம் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
யுத்தத்தில் தாய், தந்தையரை இழந்த ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர். இதே போல் யுத்தத்தில் அங்கவீனமான சிறுவர்கள் பெரும் பாதிப்புக்களை சந்தித்த சிறுவர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான சிறுவர்களின் நலன் கருதியே எனக்கு இந்த தனியான அமைச்சினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வழங்கியுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பெருமளவான சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர். வன்னியில் பெருமளவான சிறுவர்கள் இவ்வாறு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கு மேலும் வசதி வாய்ப்புக்களை செய்வதற்கும் அமைச்சினால் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க நான் திட்டமிட்டுள்ளேன்.
யுத்த பாதிப்புக்குள்ளான வடக்கு, கிழக்குப் பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதிகரித்து காணப்படுகின்றன. இத்தகைய துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த வேண்டியது எனது அமைச்சின் கடமையாக உள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர் இல்லங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. அந்த குறைபாடுகளையும் நீக்குவதற்கான முன்முயற்சிகளை நான் எடுக்கவுள்ளேன். யாழ். மாவட்டத்தின் பிரதிநிதியாகவுள்ள எனக்கு கடந்த அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது தனியான இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் யாழ். மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வைக்காண நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன்.
யாழ். குடாநாட்டு மக்களின் ஆணையின் ஊடாகவே இந்த அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது. இதன் மூலம் சகல அமைச்சர்களுட னும் கலந்துரையாடி குடாநாட்டு மக்களுக்கான தேவைகளை நிறைவு செய்வதற்கு நான் திட்டமிட்டிருக்கின்றேன். சிறுவர் விவகாரத்தில் தீவிர ஈடுபாடு காண்பிப்பதுடன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உள ரீதியாகவும் பாதிப்புக்களை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு உளநல சிகிச்சை களும் வழங்கவேண்டியுள்ளது. இவ் விட யங்கள் தொடர்பிலும் பரிசீலனை செய்து உடனடியாகவே பாதிக்கப்பட்ட சிறுவ ர்களின் நல்வாழ்வுக்காக நான் இந்த அமை ச்சைப் பயன்படுத்தி பணியாற்றுவேன். இதற்காக சகல மக்களின் ஒத்துழைப்பினையும் நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.