கரணவாய் தெற்கு கரவெட்டி பகுதியினைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது மகனை 2013ஆம் ஆண்டிலிருந்து காணவில்லை என காங்கேசன்துறை மோசடிப்பிரிவு அதிகாரிக்கு முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு கரணவாய் தெற்கு கரவெட்டி பொன்னன் வளவு பகுதியினைச் சேர்ந்த மேற்படி இளைஞன் ஒருவர் கடை ஒன்றை ஆரம்பித்து வியாபாரம் செய்வதற்கென 3 இலட்சம் ரூபாய் பணத்தினை மண்டான் பகுதியினை சேர்ந்த நபரிடம் மீற்றர் வட்டிக்கு பெற்றிருந்தார்.
கடை ஆரம்பித்து சிறுதி காலம் வரை ஒழுங்காக வட்டிப்பணத்தினை அவர் செலுத்தி வந்தாலும், வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டம் காரணமாக வாங்கிய முதலுக்கு உரிய முறையில் பணம் செலுத்த முடியாமல் போயுள்ளது.
இந்நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் நெருக்குதல் கொடுத்ததுடன், கடைக்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதனால் வேறு சில நண்பர்களிடம் பணம் பெற்று வட்டியினை செலுத்தியும் உள்ளார்.
இவ்வாறு இருவரிடமும் பணம் பெற்றதால், நெருக்கடிக்கு உள்ளானவர் தொடர்ச்சியாக மனவிரக்கி அடைந்ததுடன் தனக்கு ஒருவர் பணம் தரவேண்டும் என கூறி தனது கடையில் ஒருவரை நிறுத்தி வைத்து விட்டு சாவகச்சேரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவே இல்லை. 2 வருடங்கள் ஆகியும் காணாமல் போனவர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என அவரது தாயார் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் ஆரம்பத்தில் 3 இலட்சம் ரூபாய் தரவேண்டும் என நெருக்குதல் கொடுத்தவர்கள் தற்போது 30 இலட்சம் தரவேண்டும் எனவும் தகாராறில் ஈடுபடுவதாக அவர் மேலும் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு காங்கேசன்துறை பொலிஸாருக்கு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் கணேசராஜா அண்;மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.