கவுண்டமணியுடன் நடித்தது ஜாலியான அனுபவம் – நடிகர் சத்யராஜ்

கவுண்டமணி கதாநாயகனாக நடித்து, ஆரோக்கியதாஸ் டைரக்ஷனில், டாக்டர் சிவபாலன் தயாரித்துள்ள படம், ‘49 ஓ.’ இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. பாடல்களை நடிகர் சத்யராஜ் வெளியிட, நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். விழாவில் சத்யராஜ் பேசியதாவது:-

sivakarthikeyan-sathyaraj-49-o-audio-launch-still

‘‘நான் எத்தனையோ அழகான நடிகைகளுடன் ஜோடியாக நடித்திருந்தாலும், அண்ணன் கவுண்டமணியுடன் நடித்ததுதான் ஜாலியான அனுபவங்கள். அவருடன் நடிக்கும்போது வினாடிக்கு வினாடி, கேலியும் கிண்டலும் செய்து சிரிக்க வைப்பார். மனதில் பட்டதை நகைச்சுவையாக வெளியில் பேசுவதில், அவருக்கு இணை அவர்தான். நான், ‘வீரநடை’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, என் கைவசம் வேறு படங்கள் இல்லை. அந்த ஒரு படம் மட்டும்தான் இருந்தது.

என்றாலும் நான் விட்டுக் கொடுக்காமல் டைரக்டர் சீமானிடம், ‘‘மாலை ஆறு மணிக்கு என்னை விட்டு விடுங்கள். ஒரு டைரக்டர் கதை சொல்ல வருகிறார்’’ என்று கூறினேன். அருகில் இருந்த கவுண்டமணி அண்ணன், ‘‘எப்படியிருந்தாலும் அந்த கதையை நீங்க வேண்டாம்ன்னு சொல்லப் போவதில்லை.

கண்ணுக்கு எட்டின தூரம் வரை எந்த தயாரிப்பாளரும் உங்களைத் தேடி வரவில்லை. எதற்கு இந்த பந்தா?’’ என்று கிண்டல் செய்தார். எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரு டைரக்டர் திடீர் என்று நடிகர் ஆனார். அதற்கு அவர், ‘‘நான் ஒரு பள்ளிக்கூட விழாவுக்கு போய் இருந்தேன். அங்குள்ள மாணவர்கள் அனைவரும் என்னை நடிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அதனால்தான் நடிக்கிறேன்’’ என்றார். ‘‘அட, அது பிளைன்ட் (கண்பார்வையற்றவர்) ஸ்கூல்’ ஆக இருக்கும்பா’’ என்று அண்ணன் கவுண்டமணி தமாஷ் பண்ணினார், பாருங்கள்.

இது மாதிரி அண்ணனுடன் எனக்கு நிறைய அனுபவங்கள். ‘யு டியூப்’பில் கவுண்டமணிக்குத்தான் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘‘கட்டப்பா ஏன் பிரபாசை குத்தினார்?’’ என்ற கேள்விக்கு, ‘‘ராத்திரி கண் தெரியாமல் குத்திட்டாம்பா’’ என்று கவுண்டமணி சொல்வது போல், ‘கமெண்ட்’ போடுகிறார்கள்.’’

இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

விழாவில் கவுண்டமணி பேசியதாவது:- ‘‘இந்த படத்தின் டைரக்டர் என்னிடம், ‘கால்ஷீட்’ கேட்டு ஒரு வருடமாக அலைந்தார். கதையின் ஆரம்பமும் வேண்டாம். முடிவும் வேண்டாம். மத்தியில் இரண்டு வரிகளில் கதையை சொல்லுங்கள் என்றேன். சொன்னார். அது, விவசாயத்தின் மேன்மையை சொல்வதாக இருந்தது. புரட்சிகரமான கதை. உடனே நடிக்க சம்மதித்தேன். விவசாயம் இல்லாமல் யாரும் உயிர் வாழ முடியாது. விவசாயிகள் தங்களிடம் அரை ஏக்கர் பூமி இருந்தாலும், அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது.

ஒரு வருடம் விளையாது. அடுத்த வருடம் விளையும். மனம் தளராமல் விவசாயம் செய்ய வேண்டும் என்ற கருத்தை இந்த படம் சொல்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல. இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்பட உலக நாடுகள் அனைத்திலும் விவசாயிகள்தான் எல்லா மக்களையும் சாப்பிட வைக்கிறார்கள். அமெரிக்காவில் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு விவசாயம் செய்வார்கள். இங்கே வேட்டி கட்டிக்கொண்டு விவசாயம் செய்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். நாம் ஏன் ஓட்டுப்போட வேண்டும்? என்பதற்கும் இந்த படத்தில் விளக்கம் இருக்கிறது. எல்லோரும் குடும்பத்தோடு வந்து, ‘49 ஓ’ படத்தை பாருங்கள்.’’

மேற்கண்டவாறு கவுண்டமணி பேசினார்.

விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, துணைத்தலைவர்கள் பி.எல்.தேனப்பன், கதிரேசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பட அதிபர்கள் ஏ.எம்.ரத்னம், கே.ராஜன், கே.எஸ்.சீனிவாசன், சித்ராலட்சுமணன், எச்.முரளி, இசையமைப்பாளர் கே, பாடல் ஆசிரியர் யுகபாரதி, பாடகர் தேனிசை செல்லப்பா ஆகியோரும் பேசினார்கள். படத்தின் டைரக்டர் ஆரோக்கியதாஸ் வரவேற்றார். தயாரிப்பாளர் டாக்டர் சிவபாலன் நன்றி கூறினார்.

Related Posts