ஆணைக்குழுவின் அறிக்கை ஐ.நாவுக்கும் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கும் கையளிப்பு!

சிறிலங்காவில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஆணைக்குழுக்களின் விசாரணைகள், நீதிமன்ற விசாரணைகள் தொடர்பாக, மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் அறிக்கை ஒன்றை தயாரித்து, ஐ.நாவுக்கும் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கும் கையளித்துள்ளது.

ratnavel-missing-repoart

மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புகூறும் விடயத்தில் ஐ.நாவின் விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையிலும், அடுத்து நடத்தப்பட வேண்டியது உள்நாட்டு விசாரணையா அல்லது அனைத்துலக விசாரணையா என்ற சர்ச்சை வெடித்துள்ள நிலையிலும், இந்த அறிககை வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா காவல்துறையினர், இராணுவத்தினர், துணை ஆயுதக்குழுக்கள் போன்றவர்களாலும், வெள்ளை வான்களில் வந்தவர்களாலும் பகிரங்கமாக காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள், போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தரவாதத்தை ஏற்று இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போயிருப்பவர்கள், திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி விவகாரம் என்று மூன்று பிரிவுகளாக இந்த அறிக்கை தொகுக்கப்பட்டிருப்பதாக மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தைச் சேர்ந்த சட்டவாளர் கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.

காணாமல்போனவர்கள் தொடர்பாக விசாணைகள் நடத்திய ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளில் காணப்படுகின்ற குறைபாடுகள், சீரற்ற நடைமுறைகள் என்பன குறித்தும் மக்கள் இந்த விசாரணைகளில் நம்பிக்கை இழந்திருப்பதற்கான காரணங்கள் குறித்தும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில், காணாமல்போனவர்களின் சடலங்களும் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் பற்றியும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக சட்டவாளர் ரட்ணவேல் தெரிவித்தார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை, பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான உணர்வுகளை உள்வாங்கி சரியான முடிவுகளை மேற்கொள்வதற்குப் பேருதவியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts