அயர்லாந்தை சேர்ந்த மூன்று சகோதரிகளுக்கு ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்துள்ளன. நான்காவது சகோதரி கர்ப்பமாக இருப்பதுடன் அவருக்கும் விரைவில் குழுந்தை பிறக்கவுள்ளது. இம்முன்று சகோதரிகளுக்கும் கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி மாயோ நகரிலுள்ள காஸ்ட்லேபர் பிரதேசத்தின் மாயோ பொது மருத்துவமனையில் குழந்தைகளை பெற்றுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் அருகருகே வசித்த குறித்த சகோதரிகள் திட்டமிட்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ளவில்லை. தற்செயலாக இச்சம்பவம் நடந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தயுள்ளது என்று அம்மருத்தவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மூத்த சகோதரியான மெய்ரீட் பிட்ஸ்பெற்றிக் உள்ளூர் நேரப்படி 3.25 மணிக்கு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அவருக்கு தோமஸ் ஓக் என பெயரிடப்பட்டது. அடுத்ததாக ஜோலின் கொட்ப்பிரீ 11.00 மணிக்கு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அவருக்கு சோர்ச்சா என பெயரிடப்பட்டது. மூன்றாவது சகோதரியான பேர்னி வோர்ட் 20.30 மணிக்கு ஆண் குழந்தையை பெற்றார். அவருக்கு பெலிம் என பெயரிடப்பட்டது. இதேவேளை, நான்காவது சகோதரி கிறிஸ்டினா முரே அதே மருத்துவமனையில் குழந்தை பேற்றுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனது சகோதரிகளுக்கு குழந்தை பிறந்த அதே தினம் தனக்கும் குழந்தை பிறக்காதது ஏமாற்றத்தை தருகிறது என உள்நாட்டு வானொலியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் முரே கூறியுள்ளார்.