19ம் அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைவாக 30 அமைச்சர்களுக்கு மேல் நியமிப்பதாயின் பாராளுமன்ற அங்கீகாரம் பெறப்படவேண்டும். இந்நிலையில் இதுதொடர்பில் 3ம்திகதி பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் மீதான வாக்களிப்பில் தமிழ் அரசு கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.
முன்னதாக இது பற்றி எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றும்போது ”அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது என்பது நல்ல அரசாங்கத்தை அளிப்பது என்கிற கொள்கையோடு ஒத்துப்போவதாக தெரியவில்லை. அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமலே இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட்டிருக்கலாம். அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும்.
அண்டையில் இருக்கும் இந்தியாவில் 120கோடி மக்களுக்கான அரசாங்கத்தில் 65 அமைச்சர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அரசியல் கலாச்சாரம் தேசநலனுக்கும், தேசத்தின் தேவைக்கும் எதிராக இருப்பதால் இதிலிருந்து இலங்கை விடுபடவேண்டும்” என தெரிவித்தார்
எனினும் உடனடியாகவே தனது உரைக்கு நேர்மாறாக நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு நடுநிலை எடுத்து தமிழ் அரசு கட்சியின் 16நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.