வடமாகாணத்தில் சிறிய, நடுத்தர தொழிற்றுறை முயற்சிகள் கூடுதல் நன்மை பயக்கும்! – முதலமைச்சர்

கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் (04.09.2015) இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வடமாகாணக் கைத்தொழில் திணைக்களம் நடாத்தும் மாகாணக் கைத்தொழில் கண்காட்சியில் பங்கேற்று முதலமைச்சர் ஆற்றிய உரை அப்படியே வருமாறு,

தலைவரவர்களே, விசேட அதிதி அவர்களே, மாகாண உயர் அதிகாரிகளே, சகோதர சகோதரிகளே,

இவ்வருடத்தைய மாகாண கைத்தொழில் கண்காட்சியில் பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

எமது தொழில்த்துறைத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் செயல்த்திறன் மிக்க நடவடிக்கைகளில் வருடா வருடம் நடாத்தப்படும் இந்தக் கண்காட்சியும் ஒன்றாகும். இந்தக் கண்காட்சி கைப்பணிகள் கண்காட்சி, கைத்தறிகள் கண்காட்சி என இரு பிரிவாக நடாத்தப்படுகின்றது.

இக் கண்காட்சியானது மாகாண, தேசிய ரீதியில் நடாத்தப்பட்டு அவற்றில் பங்கு பற்றுவோர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டும் வருகின்றன.

கண்காட்சிகளை நடாத்துவதன் மூலமாக கைப்பணித்துறை, கைத்தறித்துறை, நெசவுத்துறை சார்ந்தவர்களை ஊக்குவிக்கும் அதே நேரம் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதத்திலும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் அவை அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் வடமாகாணத்தின் புவியியல், காலநிலை, சுற்றாடல், பண்பாட்டுப் பின்புலம், மக்களின் திறன், மக்களின் எதிர்பார்ப்புக்கள் போன்றவற்றின்

அடிப்படையில் நாம் சிந்தித்துப் பார்க்கும் போது, பாரிய தொழிற்சாலைகளை உண்டாக்கி உலக நாடுகளின் தொழிற்துறைப் புரட்சியினால் அந்நாடுகள் பலவற்றில் ஏற்பட்ட பாரிய சமூக சமுதாய மாற்றங்களை விட, சிறியதும் நடுத்தர அளவிலானதுமான தொழில் முயற்சிகளே எமக்கு நன்மை தருவன என்று நாங்கள் நம்பக்கூடியதாக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரைவிலக்கணத்தின் படி சிறிய அளவிலான தொழிற்துறை முன்னெடுப்புக்கள் 50இற்குக் குறைவான தொழிலாளர்களையும் 10 மில்லியன் யூரோ டொலர்களிற்குக் குறைவான நிதித்திரும்பலையும், நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் 250இற்கு மேற்படாத தொழிலாளர்களைக் கொண்டதும் 50 மில்லியன் யூரோ டொலர்களிற்குக் குறைவான நிதித் திரும்பலைக் கொண்டதாகவும் அமைய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று தென்னாபிரிக்காவில் 200 தொழிலாளர்களுக்குக் கூடாத வகையில் ஏற்படுத்தப்படும் தொழில் முயற்சிகளே நடுத்தர அளவிலான தொழிற்துறை முன்னெடுப்புக்களாகக் கருதப்படுகின்றன. வருடாந்த நிதித்திரும்பல் 64 மில்லியன் தென்னாபிரிக்க ரான்ட் இற்கு அதிகப்படாமல் இருக்க வேண்டும்.

எனவே சிறியதும் நடுத்தர அளவிலானதுமான தொழிற்றுறை முயற்சிகள் பல நாடுகளால் தமக்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை நாம் அவதானிக்கின்றோம்.

வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் எம்முடைய சமூக, சூழல் விழுமியங்களுக்கு ஏற்புடையதான சிறிய, நடுத்தர தொழிற்றுறை முயற்சிகளே எம்மால் நடைமுறைப்படுத்தப்பட்டால் கூடிய நன்மை பயக்கும் என்ற முடிவுக்கு வரக்கூடியதாகவுள்ளது. அதற்கேற்றவாறே எமது வடமாகாண கைத்தொழில் கண்காட்சியும் அமைந்திருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். எனினும் எம்மால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் கைத்தொழில்கள் மிகச் சிலவே.

1979 ம் ஆண்டில் ஜூன் மாதத்தில் பலவிதமான கைத்தொழில்கள் அப்போதைய இந்திய அரசாங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு மூன்று தொகுதிகளாக அவை பற்றிய நூல்கள் வெளிக்கொண்டு வரப்பட்டன. அவற்றை அப்போதைய கைத்தொழில் அமைச்சராக இங்கிருந்த சௌமியமூர்த்தி தொண்டைமான் அவர்கள் இலங்கையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பேரார்வம் கொண்டிருந்தார்.

இயந்திரவியல், உலோகவியல் சம்பந்தமான தொழில்களும், மின்சாரம், மின்னியல் சம்பந்தமான தொழில்களும், இரசாயனவியல் சம்பந்தமான தொழில்களும், மட்பாண்ட கலை சார்ந்த தொழில்களும், உணவு சார்ந்த தொழில்களும், தோல் சம்பந்தமான அல்லது தோல் பதனிடும் தொழில்களும் முதலாவது தொகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தன.

இரண்டாவது தொகுதியில் அதேவாறான வேறு பல தொழில்களும், அத்துடன் பின்னப்பட்ட உள்ளாடைகள், காலுறைகள் சம்பந்தமான தொழில்களும் விளையாட்டுகள் சம்பந்தமான தொழில்களும் குறிப்பிடப்பபட்டிருந்தன. மூன்றாவது தொகுதியில் அதேவாறான வேறு பல தொழில்களும் மின்சாரம் சார்பான வேறு தொழில்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

அந்நூல் பிரதிகள் இன்றும் என் கைவசம் உள்ளன. திரு.தொண்டைமான் அவர்களின் அமைச்சுச் செயலாளர் அவர்கள் கனடா செல்லமுன் என்னிடம் அவற்றைத் தந்து விட்டுச் சென்றார்.

1969 தொடக்கம் 1976 வரை வேப்பமரம் பாவிப்பு சம்பந்தமாக ஆராய்ச்சிகள் நடாத்தப்பட்டு அதிலிருந்து பயன் தரக் கூடியவாறு எவ்வெந்தக் கைத்தொழில்களை ஏற்படுத்தலாம் என்பது சம்பந்தமான நூல் ஒன்று இந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்டிருந்தது. அதன் பிரதியும் என் கைவசம் உள்ளது.

எந்தளவுக்கு அந்த நூல்கள் எமக்குப் பயனுடையதாக இருப்பன என்று என்னால் கூற முடியாதிருப்பினும் சிறிய நடுத்தர அளவிலான கைத்தொழில்கள் எம்மால் நடைமுறைப்படுத்தப்படும்போது எம்மக்களுக்கு நன்மை தருவனவாக அமையக் கூடிய தொழில்கள் எவையென அடையாளப்படுத்தப் பொருத்தமான தகவல்கள் அந்நூல்களில் காணக்கூடியதாக இருக்கின்றன.

இவ்வாறு தொழில்கள் அடையாளப்படுத்தப்பட்டு எமது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு எமது மக்களின் ஆற்றல் அவற்றினூடாக வெளிக்கொண்டு வரப்படும் போது அவர்களது உற்பத்திகளை தேசிய ரீதியாகவும் சர்வதேச மட்டத்திலும் சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள நாங்கள் ஆவன செய்ய வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொடுப்பது எமது தலையாய கடமையுமாகும் எனக் கருதுகின்றேன்.

இவ்வருடம் எமது கண்காட்சியானது மூன்று பிரதான தொகுதிகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கூடம், செயன்முறைக் கூடம், விற்பனைக் கூடம் என வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

செயன்முறைக் கூடத்தில் கைத்தறி நெசவு, பேப்பர் உற்பத்தி, மரவேலை, மண்பாண்ட உற்பத்தி, சிப்பியினாலான தொழில் உற்பத்தி, பனைசார் தொழில் உற்பத்தி, உணவு உற்பத்தி, தோல்சார் உற்பத்தி பொருட்கள் என பல பொருட்கள் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் மேலும் பலவற்றை நாங்கள் வருங்காலங்களில் உள்ளடக்க வேண்டும் என்பதே எனது அவா. அதற்காகவே மேற்குறிப்பிட்ட அந்நூல்கள் பற்றி நான் இங்கு குறிப்பிட்டேன்.

குறித்த நூல்களை வேண்டுமெனில் எமது திணைக்களத்தினரிடம் கையளிக்க எனக்கு ஆட்சேபணை எதுவுமில்லை. அவை இந்திய நாட்டுடன் சம்பந்தப்பட்டிருந்தாலும் எமது மக்களுக்குப் புதிய கைத்தொழில்களை அடையாளப்படுத்தி அவற்றை அவர்களுக்கு அறிமுகப்படுத்த அந்நூல்களின் மூலம் முடியுமானால் எமது மக்களுக்கு அவை பொருளாதார விருத்தியை ஏற்படுத்திக் கொடுப்பன என நான் கருதுகின்றேன்.

இந்திய நாட்டில் கிராமந் தோறும் இப்பேர்ப்பட்ட கைத்தொழில்களுக்குப் போதிய ஊக்கமும் ஆக்கமும் பண உதவிகளும் வழங்கி வருகின்றார்கள். அதேபோன்று எம்மால் முடிந்தமட்டில் எமக்குப் பொருத்தமான கைத்தொழில்களை அடையாளங் கண்டு அவற்றை ஊக்குவித்து எமது மக்களுக்குப் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்த நாம் முன் வரவேண்டும்.

இதன் பொருட்டுத்தான் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் எமது திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அந்தந்தப் பிரதேசத்திலுள்ள கைவினைஞர்களை இனங்கண்டு அவர்களின் ஆக்கங்களை மாகாண மட்ட கண்காட்சியில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். அவர்கள் நடவடிக்கைகளை இனி விரிவுபடுத்த வேண்டும் என்ற கருத்துடையவனாக இருக்கின்றேன்.

தொழில்த்துறைகளில் ஈடுபட்டு வருபவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் புடவைக் கைத்தொழில்த் திணைக்களம் என்பவற்றின் மத்தியஸ்தர்கள் மூலம் தரமான எம்மவர் ஆக்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் முதல் மூன்று இடங்களைப் பெறும் கைப்பணிப் பொருட்கள் தேசிய அருங்கலைகள் பேரவையினால் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட கண்காட்சியிலும் கைத்தறிப் பொருட்கள் புடவைக் கைத்தொழில்த் திணைக்களத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட கண்காட்சியில் வைக்கப்பட்டும் பெறுமதிமிக்க பரிசில்களை அவை பெற்று வந்துள்ளன என்று நம்புகின்றேன்.

எமது அலுவலர்கள் நடைமுறையில் இருக்கும் தொழில்கள் சார்பான கைவினைஞர்களை இனங்காண்பது மட்டும் போதாது. நாட்டுக்குப் பயன் தரும் புதிய கைத்தொழில்களை அடையாளங் கண்டு எமது மக்களிடையே அவற்றை அறிமுகப்படும்துவதும் முக்கியமானதாகும் எனக் கருதுகின்றேன்.

மேலும் எமது திணைக்களத்தின் வியாபார ஆலோசனை நிலையத்தினூடாக வணிக வர்த்தகத்தில் ஈடுபடும் முயற்சியாளர்களுக்கான முதலீட்டு ஆதரவு, தொழில் முயற்சி மேம்பாடு, வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு போன்ற பல சேவைகளையும் நாங்கள் வழங்கி வருவதாக அறிகின்றேன்.

எனினும் எமது நடவடிக்கைகளானவை விரிவாக்கம் செய்யப்பட்டு போதியவாறு வடமாகாணத்தில் கைத்தொழில்களை மேம்படுத்த நாம் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். அவற்றுக்கான உதவிகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

அண்மையில் நான் வடமேல் மாகாண முதலமைச்சரைச் சந்தித்த போது குருணாகலை மாவட்டத்தில் உற்பத்தியாகும் பொருட்களை எவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு விற்பனைச் சாவடி மூலம் தாங்கள் வெளிநாட்டுப் பிரயாணிகளிடையே சந்தைப்படுத்தி வருகின்றார்கள் என்பது பற்றி எடுத்துரைத்தார்.

இன்றைய இந்தக் கண்காட்சியானது எம்மைப்பற்றி வெளியுலகத்திற்கு எடுத்தியம்புவது மட்டுமன்றி எமது கைவினைஞர்களை மக்கள் அடையாளங் காணவும் புதிய புதிய கைத்தொழில்களை மக்கள் நடைமுறைப்படுத்தவும் அவற்றின் பயன்களைத் தேசிய ரீதியில் சந்தை வாய்ப்புப் பெற உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் நாம் உரியவாறு கடமையாற்ற வேண்டும் என்று கூறி இந்த வடமாகாண கைத்தொழில் கண்காட்சியில் என்னைப் பங்குபற்றச் செய்த அனைவருக்கும் நன்றியை நவின்று விடைபெற்றுக் கொள்கின்றேன்.

என அவர் தனது உரையில் தெரிவித்திருந்தார்

Related Posts