Ad Widget

புலிகளின் முன்னாள் சுன்னாகம் பிரதேசப் பொறுப்பாளர் விடுதலை!

பொலிஸ் அதிகாரியொருவரை கொலை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரதேசப் பொறுப்பாளருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படாமையால் அவரை நிரபராதி என தீர்ப்பளித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் விடுதலை செய்தார்.

கடந்த 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி இணுவில் பிரதேசத்தில் யாழ்.பொலிஸ் அத்தியட்சகரான சாள்ஸ் விஜயவர்த்தன என்பவரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் சுன்னாகம் பிரதேச பொறுப்பாளராகவிருந்த பாலசிங்கம் பிரவீன்சுஹராஜ் என்பவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.

தொடர்ந்து இந்த வழக்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு, கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்.மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று, நேற்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. சந்கேநபர்தான் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கு நேரில் கண்ட சாட்சியங்கள் இல்லையெனவும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கான சாட்சிகளும் இல்லையெனவும் வழக்குத் தொடருநர் குற்றத்தை நிரூபிக்கத் தவறியமையால் மன்று சந்கேநபரை நிரபராதியென தீர்ப்பளித்து விடுதலை செய்கின்றது என நீதிபதி கூறினார்.

Related Posts