இலங்கை உள்ளிட்ட ஆசிய மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த அகதிகள் தங்குவதற்கும், நிதியுதவி பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வதற்கும் ஒரு புதிய இணையத்தளத்தை ஜேர்மனியை சேர்ந்த தம்பதிகள் உருவாக்கியுள்ளனர்.
பெர்லின் நகரை சேர்ந்த மரெய்கே கெய்லிங் (28) மற்றும் ஜோனஸ் ககோஸ்கே (31) என்ற தம்பதியினர், அகதிகளுக்கு பலன் ஏற்படும் வகையில் http://www.refugees-welcome.net/ என்ற புதிய இணையத்தளத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த இணையத்தளம் மூலம் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் குடியேற விரும்பும் வெளிநாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு பல நன்மை பயக்கும் ஏற்பாடுகளை இந்த இணையத்தளம் உருவாக்கி தருகிறது.
உதாரணமாக, ஜேர்மனியில் குடியேற விரும்பும் இலங்கையை சேர்ந்த நபர், அவருடைய நாட்டை சேர்ந்தவர்கள் அல்லது அவருடைய பழக்க வழக்கங்களுக்கு தகுந்த முறையில் பொருத்தமான பிற அகதிகள் தங்கியிருக்கும் குடியிருப்பு பற்றிய தகவல்களை இந்த இணையத்தளம் வழங்கும்.
மேலும், ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் வாடகை வீடுகளை ஏற்பாடு செய்துக்கொள்ளவும், அந்த வாடகை வீடுகளுக்கு உரிய கட்டணத்தை செலுத்த தேவையான நிதியுதவி பெறவும் இந்த இணையத்தளம் உதவுகிறது.
தற்போது வரை இலங்கை, ஈராக், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ரஷ்யா, நைஜீரியா, சோமாலியா, சிரியா உள்ளிட்ட 21 நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு இந்த இணையத்தளம் உதவியுள்ளது.
குறிப்பாக, இதுவரை 124 அகதிகளை ஒருங்கிணைத்து ஜேர்மனியில் 80 அகதிகளையும் ஆஸ்திரியாவில் 44 அகதிகளையும் தங்கள் நாடுகளை சேர்ந்த அல்லது தங்களுக்கு பொருத்தமானவர்களுடன் தங்க வைத்து உதவியுள்ளது.
இது குறித்து பேசிய தம்பதிகள், வெளிநாடுகளிலிருந்து ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு வரும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் ஒவ்வொரு வழிகளில் பிரிந்து சென்று கும்பல் நிறைந்த அகதிகள் முகாமில் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
மேலும், பல நாட்டினர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெற முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த குறைகளை தவிர்க்கவே அகதிகளுக்கு நன்மை ஏற்படும் வகையில் இணையத்தளத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தனர்.
ஆங்கிலம் மற்றும் ஜேர்மன் மொழிகளில் உள்ள இந்த இணையத்தளத்தில் கேட்கப்படும் சில தகவல்களை அளித்த பிறகு இணையத்தளத்தில் உதவிகள் தேவைப்படும் அகதிகள் பதிவு செய்துக்கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.