போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட பின்னரே தமது நிலைப்பாட்டை வெளியிடமுடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளதாக இந்திய நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் விசாரணைக்கென்று நியமிக்கப்பட்ட சன்ட்ரா பெய்டாஸ், மார்ட்டி அடிசாரி, அஸ்மா ஜகாங்கிர் மற்றும் சில்வியா காட்ரைட் ஆகியோரின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறைக்கு ஆதரவளிக்கப் போவதாக அமெரிக்காவின் தெற்காசிய பிரதிச்செயலாளர் நிஸா பிஸ்வால் கடந்த வாரம் கொழும்பில் வைத்து தெரிவித்திருந்தார்.எனினும் அமெரிக்காவின் முந்திய கொள்கை தொடர்பில், அவர் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை என்று சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா எப்போதுமே உள்நாட்டு மற்றும் சர்வதேச விசாரணை தொடர்பிலேயே பேசி வந்தது. 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா சர்வதேச விசாரணையை கோரியிருந்தது. எனினும் கடந்த வாரம் அதற்கு சமாந்தரமாக அமெரிக்கா உள்ளக விசாரணையை கோரியுள்ளது. இந்தநிலையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வுக்காணப்பட வேண்டும். அதற்காக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். இது மைத்திரி – ரணில் ஆட்சியில் எதிர்ப்பார்க்கப்படுகிறது என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.