Ad Widget

யாழ் இந்துக்கல்லூரியின் 125 வருட நிறைவும் ரங்காவின் பிரசன்னமும்!

யாழ்ப்பாணத்தின் மிகப்பிரபலமான கல்லூரியான யாழ் இந்துக்கல்லூரி 1890 இல் ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடம்(2015) தனது 125 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் உலகமெங்கும் உள்ள பழையமாணவர் சங்கங்களாலும் கல்லூரி சமூகத்தினாலும் இதனை முன்னிட்டு செயற்பாடுகள் சிறு சிறு விழாக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் மகுடமாக நிறைவு விழா ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது இங்கு தான் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான விடயமாக , ரங்கா விடயம் முற்றியுள்ளது .

இலங்கை அரசியலிலும் இலங்கை ஊடகவியலிலும் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் பிரசைகள் முன்னணி என்ற அரசியல் கட்சியின் தலைவரான சிறீரங்கா தற்போது யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியிலும் தனது பிரசன்னத்தின் மூலம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார்.

விழா ஏற்பாடுகளின் பின்னணி

புதிய அதிபர் கடந்த வருடம் பொறுப்பேற்றதும் கடந்த வருட இறுதியில் 125 ஆண்டு விழா சம்பந்தமான கூட்டம் என்ற பெயரில் பத்திரிகை விளம்பரம் இடப்பட்டு 29.11.2014 இல் கூட்டப்பட்டது. அங்கு சென்ற பழையமாணவர்களுக்கு காத்திருந்தது முதல் அதிர்ச்சி .முதலில் அதிபர் உரையாற்றினார். அவர் தனது உரையில் இது அறிமுகக்கூட்டத்தினை தொடர்ந்து நடைபெறும் 2 வது கூட்டம் என்றும் 1 வது கூட்டத்தில் 8 விடயங்கள் ஆலோசிக்கபட்பட்டுள்ளன என்றும் அதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்களின் பெயர்களை மீள ஞாபகப்படுத்தினார். மட்டுப்படுத்திய அளவினர் முதல் கூட்டத்தில் அழைக்கபட்டிருந்தனர் என்றும் இந்த கூட்டத்தில் ஒவ்வொரு விடயத்திலும் துறை சார்ந்தவர்களை புதிதாக இணைக்கும் படியும் கேட்டு அடுத்ததாக பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்கள் உரையாற்றுவார்கள் என்று அமர்ந்தார். (ஆதாரம் கூட்ட அறிக்கை)

jhc_meeting
கூட்ட அறிக்கை பாகம் 1

இதுவே சபையில் சிறு சலனத்தினை ஏற்படுத்தி விட்டிருந்தது முக்கிய விழா ஏற்பாட்டுக்குழுக்கள் ஏற்கனவே தீர்மானிக்கபட்டுவிட்டிருக்க பின்னாளில் வரக்கூடிய சர்ச்சைகளை சமாதானப்படுத்தவே இந்த கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக அவர்கள் கூறிக்கொண்டனர்.இருந்தும் புதிய அதிபரின் முதல் கூட்டம் என்ற வகையில் கூட்டம் அமைதியாகவே இருந்தது.எனினும் யாழ் பழையமாணவர் சங்கத்தலைவர் உட்பட பலர் இடை நடுவிலேயே வெளியேறியிருந்தனர்

ஒவ்வொருவராக குழுத்தலைவர்கள் உரையாற்றதொடங்கினர்.

 

jhc_meeting
கூட்ட அறிக்கை பாகம் 2

இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுத்தலைவர் என்று அப்போது நுவெரலியா பாராளுமன்ற உறுப்பினரும் சக்தி குழும ஊடகவியலாளருமான மின்னல் ரங்கா எழுந்து தனது திட்டங்கள் குறித்து விபரித்து சென்றார் இதன்போது சில உறுப்பினர்கள் அந்தக்குழுவுக்குள் உள்வாங்கப்பட்டனர். இவ்வாறாக ரங்காவின் உள்நுழைவு 125வது நிறைவு விழா ஏற்பாட்டுக்குழுவில் உறுதிப்படுத்தப்பட்டது. இந்தக்குழுக்களின் தலைவர்கள் குறித்த பொதுச்சபை கூட்டத்தில் பிரேரி்க்கபட்டு வழிமொழியப்படாமல் நியமனமாகவே இருந்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ரங்காவின் கல்லூரி உடனான உறவு

ரங்கா யாழ் இந்துக்கல்லூரியில் வவுனியாவில் இருந்து வந்து இணைந்து கல்விகற்றதாகவும் பின்னர் இந்தியப்படைகள் யாழ் மண்ணை ஆக்கிரமித்த வேளையில் (1989) நடைபெற்ற அசம்பாவிதங்களின் பின் அவர் வெளியேறிவிட்டதாகவும் தெரியவருகின்றது. பின்னர் கடந்த சில வருடங்களின் முன் யாழ் இந்துக்கல்லுாரியின் கொழும்பு பழையமாணவர் சங்கங்கத்தில் உள்நுழைந்த அவர் அதன் உபதலைவர்களில் ஒருவராக இருந்து வருகின்றார் .இந்த விழா நடவடிக்கைககளுக்காக கொழும்பு பழையமாணவர்சங்கம் கடந்த 2014ம் வருடம் இருந்த அதே நிர்வாக குழுவினை இந்த முறையும் பொதுக்கூட்டமொன்றின் மூலம் நீடித்துக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்னைய அதிபர் ஓய்வு பெற்றவேளையில் புதிய அதிபர் நியமனத்தின் போது மன்னார் இந்துக்கல்லூரி அதிபராக இருந்த தந்போதைய அதிபரை யாழ் இந்துக்கல்லூரிக்கு கொண்டு வருவதற்கு பழையமாணவர் சங்கங்கள் எடுத்த முயற்சிக்கு அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சிறீரங்கா அவர்கள் முக்கிய வகிபாகத்தினை வகித்திருந்தார். இருந்த போதிலும் அதிபரின் நியமனம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

ஆரம்பத்திலேயே ஏன் எதிர்க்கவில்லை? அதிபர் கேள்வி!

ரங்கா எந்தக்குழுவுக்கும் தலைமை தாங்க தகுதியற்றவர் அவரது பெயர் நீக்கப்படவேண்டும் அதிபர் அல்லது யாழ்ப்பாணத்தில் ஒருவர் தலைமை ஏற்கவேண்டும் என பழையமாணவர்கள் பலரும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் பின்னணியில் அதிபர் என்ன சொல்கின்றார் என்று அறிய முற்பட்டோம் .கடைசியாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினரின் கருத்தின்படி அதிபர் ”ஏன் இவ்வளவுகாலமும் சும்மா இருந்தீர்கள் ஆரம்பத்திலேயே எதிர்த்திருக்கலாமே ? விழாவுக்கு ஒரு மாதம் உள்ள நிலையில் எப்படி மாற்றங்கள் செய்வது” என்று கேள்வி எழுப்பினாராம்.

”ரங்காவின் விழாக்குழு தலைமையை முதல் நாட்களில் இருந்தே நான் அதிபரிடமும் பழையமாணவர் சங்கங்களிடமும் முறையிட்டு வந்தேன். ஒருவரும் கண்டபாடில்லை. வெளிப்படையாக கிளர்ச்சி செய்யாதமைக்கு முக்கிய கரணம் பாதுகாப்பு .எனக்கு குடும்பம் மற்றும் உறவினர் இலங்கையில் இருகின்றனர் நானும் அடிக்கடி போய்வாறனான் ஆகவே எனக்கு இதனை வெளிப்படையாக எதிர்க்க பயமாக இருக்கிறது ” என்று ஐரோப்பாவின் ஒரு பழையமாணவர் சங்க முக்கிய உறுப்பினர் கூறுகின்றார்

”இந்த குழுவோ அல்லது நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழுவோ எதுவும் குறிப்பிடத்தக்களவில் சாதிக்கவில்லை. சங்கங்கள் தனியே தான் விழாக்களை நடாத்தின வேறு ஒரு குழு முயற்சியையும் அரங்கேற்றவில்லை .பலதடவை பொது வெளியில் குழுக்களின் பட்டியல் பகிருவதற்கு கேட்கப்பட்ட போதும் கல்லூரியினதோ பழையமாணவர்சங்கத்தினதோ உத்தியோக பூர்வ இணையத்தளங்களிலோ இது வரை எந்த பட்டியலோ அல்லது நிகழ்ச்சி நிரலோ வெளியிடப்படவில்லை என்பதிலேயே தெரிகின்றது அவர்களது உள்நோக்கம்.வெளியிடப்பட்டால் உலகளாவிய ரீதியில் உள்ள பழையமாணவர்கள் மேலும் கொதிப்படைவார்கள் என்பதே அதற்கு காரணம் ” என்று குமுறுகின்றார் ரங்காவின் பிரசன்னத்தினை தீவிரமாக எதிர்க்கும் பழைய மாணவர் ஒருவர்.

இது பற்றி யாழ் பழையமாணவர்சங்க செயற்குழு உறுப்பினர் ஒருவரிடம் பேச்சுக்கொடுத்தோம் அவர் கருத்து தெரிவிக்கையில் ”உண்மையில் பெரும்பான்மையானவர்களுக்கு இந்த விழா ஏற்பாட்டு நடைமுறை பிடிக்கவே இல்லை அன்றைய கூட்டத்துடன் பலர் வெளியேறி விட்டனர். அவர்கள் வெளியேறும்போது எல்லாம் முதலே இரகசியமாக திட்டமிட்டுவிட்டனர் பிறகெதற்கு எங்களை கூப்பிட்டவங்கள் என்று சொல்லிவிட்டு போயினர் இதன் பின் ஒரு தடவை சம்பந்தமில்லாமல் பிரச்சனைக்குரியவர்களை தனியே அழைத்து கூட்டம் வைத்து ரங்கா வெறுமனே விழா ஏற்பாட்டுக்குழுவின் இணைப்பாளராகவே இருப்பார் அபிவிருத்தி பல இன்னோரன்ன விடயங்களுக்காகவும் போடப்பட்ட எல்லாக்குழுவுக்கும் தலைவராக அதிபரே இருப்பார் சமாதானம் கூறி இருத்தினர்” என்கிறார்.

அவுஸ்ரேலிய பழையமாணவர் சங்க உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில் ”யாழ் இந்து ஒரு அடிப்படை பாரம்பரியத்தினை கொண்ட தமிழ் சைவ விழுமியங்களை முழுமையாக பின்பற்றும் ஒரு உன்னத அமைப்பு. இதன் 125 வருட நிறைவு விழா என்பது இந்து அன்னைக்கு மட்டுமல்ல தமிழ் சமூகத்திற்கே ஒரு அடையாளம். இதனை ஒருவரும் கடைசி நிமிடத்தில் குழப்பவில்லை. நாங்கள் கடைசி நிமிடமாவது இந்த விடயத்தினை கவனத்தில் கொண்டு வந்து இதனை சகலரும் ஒற்றுமையுடன் பங்கெடுத்து கொண்டாடுவதற்கு ஒத்துழைப்பு கேட்கிறோம்” என்றார்

12027552_10153234194429141_5155206813201731685_n
ஏற்பாட்டு க்குழுவின் செயற்பாட்டுக்கு அதுவும் ஒரு எடுத்துக்காட்டு

இன்னும் ஒரு பழையாணவர் கருத்து கூறும்போது ”பலர் அப்போதிருந்த அரசியல் நிலமையில் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில்தான் அமைதியாக குமுறினர் இருந்தும் எதிர்ப்புகளை வெளிக்காட்டினர். களத்தில் பணியாற்றிய பல பழைய மாணவர்கள் பொறுப்படுத்தவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. தற்போதுள்ள நிலையில் நாங்கள் இதை அனுமதிக்கப்போவதில்லை. கொழும்பு பழையமாணவர் சங்கத்தின் செயற்பாடுகள் தலையிருக்க வாலாடும் செயற்பாடு போன்றது.களத்தில் இருக்கும் தாய்ச்சங்கமான யாழ் பழையமாணவர் சங்கத்தின் கருத்துக்களை செவிமடுக்க அவர்கள் தயாராக இல்லாமலிருப்பது கவலைக்குரியது .எக்காரணம் கொண்டும் அவர்களது முயற்சி கைகூடாது அப்படி நடந்தால் அது அதிபரும் கொழும்பு பழையமாணவர் சங்கமும் எடுத்த விழாவாக மட்டுமே அமையும்” என்கிறார்.

விசேட செயலணி உருவாக்கமும் கேள்விக்குறி

ஆகஸ்ட் 4 ந் திகதி காலை கல்லூரி அதிபர் யாழ் பழைய மாணவர் சங்கத்தினை தொடர்பு கொண்டார் 125வது கொண்டாட்டம் சம்பந்தமாக ஒரு கலந்துரையாடல்ஏற்பாடுசெய்தார் .இந்தக் கலந்துரையாடலில் 125 விழாவிற்கான ஏற்பாடுகள் மந்த கதியில் தான் உள்ளதென்பதனை கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர். விழாவிற்கான நூல் சம்பந்தமாகவும் விழா ஒழுங்கமைப்புச் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

அதன்பின் அவரது தலைமையில் இனி விசேட செயலணி ஒன்று இயஙகும் என்று தெரிவித்தார். ஆனால் அதுபற்றி அறிவித்தலை பழையமாணவர்சங்கம் வெளியிட்டதும் மறுநாள் அந்த செய்தியை எடுத்து விடுமாறு வேண்டினார் அவருக்கு வந்த அழுத்தங்களே அதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அப்படி ஒரு செயலணியும் இல்லை என்றே கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கத்தின் நிலைப்பாடு

பல்வேறு வாதப்பிரதிவாதங்களின் பின் யாழ் பழைய மாணவர் சங்கம் அதிபருக்கு அனுப்பிவைத்த கடிதம் பிரச்சினையின் தீவிரத்தினை உணர்த்தியது.அந்தக்கடிதம் கூறுவது இதைத்தான்

”125வது ஆண்டு விழாவினை எமது கல்லூரியின் பாரம்பரியத்தையும், அடிப்படை விழுமியங்jaffna-hindhu-oba-406x600களையும் முன்னிலைப் படுத்தி, ஒன்று பட்டு ஒழுங்கமைக்கும் நோக்கத்துடன் எமது சங்கத்தின் 8 பிரதிநிதிகளை, விழா நிகழ்வு ஒழுங்கமைக்கும் உப குழுவிற்குத் தெரிவு செய்து அனுப்பியிருந்தோம்.

அவ்வுப குழுவின் இணைப்பாளராக அறிவிக்கப் பட்டிருந்த திரு. ஜெ. ஶ்ரீரங்கா, தனது வகிபாகத்தை சீராக மேற்கொள்ளாது, செயலறு நிலையில் தொடர்ந்து இருந்தார். இதனால் உப குழுவின் செயற்பாடுகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்றன. இவ்வாறு அவர் தனது வகி பாகத்தைச் செவ்வனே ஆற்றாத நிலையிலும், 125வது ஆண்டு விழா நிகழ்வுகளின் போது அவரது பிரசன்னத்தை முதன்மைப் படுத்தி, அவரைப் பிரபல்யப் படுத்தும், மறைமுக நிகழ்ச்சி நிரலுடன், இவ்வுப குழுவின் ஒரு சாரார் தொடர்ந்து செயற்படுவதை நாம் உணரத் தலைப்பட்டோம்.

இதனால், விழா தொடர்பான பல விடயங்களில் ஒருமித்த கருத்தை எட்டுவது சிரமமாகியது. ஏலவே எடுக்கப் பட்ட முடிவுகள் கூட, நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்களினதும், ஏனைய அங்கத்தவர்களினதும் சம்மதமின்றி, ஒரு தலைப் பட்சமாக மாற்றப் பட்டன.

இதன் காரணமாக, ஒவ்வொரு விடயத்திலும், முரண்பாடு முற்றியது. புரிந்துணர்வு அற்றுப் போனது. 125 வது ஆண்டு விழாவை அனுசரிக்கும் அடிப்படை நோக்கமே வேரறுந்து போயிற்று.

இணைப்பாளர் தொடர்பாக, தளத்தில் இருக்கும் ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்தமான, பலத்த எதிர்ப்புகளை மீறி, புரிந்துணர்வையும், ஒற்றுமையுணர்வையும் ஏற்படுத்தத் தவறிய, முரண்பாடுகளையும், பகைமையுணர்வையும், மேலும் வளர்க்கும் ஏது நிலை காணப் படுகின்ற ஒரு உப குழுவின் பங்காளர்களாகத் தொடர்ந்து இருப்பது அர்த்தமற்றது என எமது சங்கம் கருதுகிறது.

இதனால், இன்றைய தினத்திலிருந்து (25/08/2015) 125வது ஆண்டு விழா நிகழ்வு ஒழுங்கமைப்பு உப குழுவிலிருந்து எமது பிரதிநிதிகளை மீளப் பெறுவது என்று எமது சங்கம் தீர்மானித்துள்ளது” இது தான் கடிதம்.

ஆரம்பத்தில் பதவி வழியாகவே யாழ் பழையமாணவர்சங்க அலுவலர்கள் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2015 பெப்ரவரி ஆரம்பத்தில் யாழ் பழையமாணவர் சங்கம் தனது நிர்வாக சபையினை புதிதாக தெரிவு செய்ததன் பின்
இந்த 8 பேரில் பலர் இடையில் அதிபரால் கூட்டப்பட்ட கூட்டத்தில் சமாதானம் செய்யும் பொருட்டு குழு உறுப்பினர் அதிகரி்ப்பின் மூலம் யாழ் பழையமாணவர் சங்கத்தின் பிரதிநிதிகளாக உள்ளவாங்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

 

தற்போதைய நிலையில் என்ன நடக்கின்றது

பல்வேறு பழைய மாணவர் சங்கங்களும் 125 வது ஆண்டினை முன்னிட்டு தனித்தனியே தமது சங்கங்கள் ஊடாக நிகழ்வுகளையும் செயற்பாடுகளைனயும் செய்து வருகின்றன. அவற்றில் எந்தவித தடங்கல்களும் இருப்பதாக தெரியவில்லை தற்போது மகுடமாக அமையப்போகின்ற பொது நிகழ்வுகள் மற்றும் நிறைவு விழா குறித்தே சர்ச்சைகள் நிலவுகின்றன. ஏற்பாட்டுக்குழுவின் பிரதிநிதித்துவத்தில் இருந்து மேற்படி யாழ் பழைய மாணவர்சங்கத்தின் இடை விலகலானது 125 வது ஆண்டினை முன்னிட்ட தமது ஏனைய தனிப்பட்ட நிகழ்வுகள் செய்ற்பாடுகளை எவ்வகையிலும் பாதிக்காது என சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்தார்.

ரங்காவுக்கான முக்கியத்துவம் மேடையில் எந்த வகையிலும் வழங்கப்படக்கூடாது என்பதில் பழையமாணவர்கள் பலரும் குறியாக உள்ளனர்.ரங்காவை நீக்கக்கூடாது என்று கொழும்பு பழையமாணவர் சங்கம் குறியாக இருக்கிறது. யாழ் சங்கம் தனது பிரசன்னத்தினை மேடையில் அதிகரிக்க பாடுபடுவதாக கொழும்பு குற்றம் சாட்டுகின்றது .ஆனால் அதனை கடுமையாக யாழ்ப்பாண சங்கம் மறுக்கின்றது. தமக்கு தமது பிரசன்னம் முக்கியமல்ல ரங்கா இருக்க கூடாது என்பதே முக்கியம் என்று சங்கத்தின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

நிறைவு விழாவின் எதிர்காலம்!

என்றுமே தமிழ்த் தேசியத்தின் பால் உறுதியுடன் இருந்து வந்த யாழ் இந்துக் கல்லூரி சமூகத்தின் மிகப்பெரிய விழாவொன்றில், முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கொடூரமாக அரங்கேற்றிய சிங்களக் கடும்போக்குவாதக் கட்சியொன்றின் தலைமை மற்றும் அவரின் குடும்பத்தினருடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டவரும், ஊடகத்துறையின் ஓட்டு மொத்த மாண்பையும் கேள்விக்குறியாக்கிய , பழையமாணவர்கள் பலரால் வெறுக்கப்படும் சிறீரங்காவை தொடர்ந்து உள்நுழைத்து பிரச்சனையினை பெரிதாக்குவதன் மர்மம் என்ன என கல்லூரிச் சமூகத்தினர் பலரும் பகிரங்கமாக நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் கேள்வி எழுப்பியுள்ளனர்.அவர்களுடைய வினாக்களாக

பாடசாலையில் மிகக்குறுகிய காலம் கல்வி கற்ற சர்ச்சைக்குரிய அரசியல்வாதி சிறீரங்காவினை முன்னிலைப்படுத்தி, பழைய மாணவர்களுக்குள் பிளவினை ஏற்படுத்தி யாழ் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழா பிரச்சனைக்குள்ளாக்கப்படுவது ஏன்?

சிறீரங்கா என்கிற தனி நபரால் பாரம்பரியம் மிக்க யாழ் இந்துக் கல்லூரி மற்றும் 125 ஆவது ஆண்டு விழா ஒழுங்கமைப்பு உப குழுவின் ஒற்றுமையும், கூட்டிணைவும் சீர் கெடுகின்றதெனில் கல்லூரி நிர்வாகம் சரியானதொரு முடிவை எடுக்கத் தயங்குவது ஏன்?

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஒட்டுமொத்த மாண்பினையும், கௌரவத்தினையும் ஒரு சிலரின் சுய இலாபத்துக்காக அடகு வைப்பது எந்த வகையில் நியாயம்?

கல்லூரியின் 125 வது ஆண்டு பொது விழாக்கொண்டாட்டங்களுக்கான ஏற்பாட்டுக்குழுவின் பெயர்ப்பட்டியல் மற்றும் விழா நிகழ்ச்சி நிரல் தொடர்பிலான செய்திகள் எதுவும் இது வரை கல்லுாரியாலோ விழா ஏற்பாட்டாளர்களாலோ இன்னும் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படாமலிருப்பது ஏன்?

ஏனைய சர்வதேச பழைய மாணவர் சங்கங்கள் ஏற்பாட்டுக்குழுவில் இருந்து விலகுமா ?

ஆகியன முன்னிலை வகிக்கின்றன.எங்கே போய் இது முடியும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

12002439_138676146480532_3347871138429661536_oஇறுதியாக கிடைத்த தகவலின்படி ரங்கா மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தலிலும் நன்றி கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சம் பிரதமவிருந்தினராக வரும் முத்திரைவெளியீட்டு வைபவத்திலும் ஈடுபடுவார் என தெரிய வந்துள்ளது. இந்த அமர்வில் 125வது ஆண்டு மலர் ஒன்றும் வௌியிடப்படவுள்ளது அந்த மலரில் இணைப்பாளராக ரங்காவின் வாழ்த்துச்செய்தியும் இடம்பெறுகின்றது என தெரியவருகின்றது .மலரின் முதற்பிரதியனை நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் பெற்றுக்கொள்கின்றார்.

யாழ் பழையமாணவர் சங்கம் விழாவில் எந்த அமர்விற்கும் தலைமை தாங்க மறுத்துவிட்டது. விழாவை புறக்கணிக்கப்போவது தொடர்பில் கலந்தோலோசித்து வருகின்றது.

பிந்திய செய்தி
யாழ் இந்துக்கல்லூரி 125ம் ஆண்டு இறுதி விழாவை பழையமாணவர் சங்கம் புறக்கணித்தது

Related Posts