இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் கல்வியில் பின்னடைவு என்பது கவலைக்குரிய விடயமாகும். அதாவது போர் மற்றும் பிரதேசத்தின் பின்தங்கிய நிலை காரணமாகவும் கல்வியில் சற்று பின்தங்கி நிற்கின்றோம் என யாழ்.பல்கலையின் முன்னாள் வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.
யாழ்.பிரதேச செயலகத்தில் பாடசாலைக்கல்வியில் இடைவிலகிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறிப்பாக யாழ்.பல்கலையில் கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய துறைகளில் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தமிழர்களாகிய நாம் இலவசக்கல்வியை தவறவிடவேண்டாம் .எதிர்தாலத்தில் மாணவர்கள் நற்பிரஜையாக திகழ வேண்டுமானால் கல்வியில் கரிசனை காட்ட வேண்டும்.
மேலும் அறிவு சார் பொருளாதாரத்தை மேம்படுத்துவதானால் கல்வியில் திறமையான வேலைப்படையை உருவாக்க முடியும்.
தமிழ் மக்களை பொறுத்தவரையில் போர் மற்றும் வறுமை காரணமாக கல்வியில் பின்தங்கி இருந்தோம்.இனி நாம் ஒருபோதும் கல்வியில் பின்தங்கி இருக்காமல் துணிந்து கல்வியில் தமிழர்களுக்கு என்ற இடத்தை தக்கவைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.