வடமாகாணம் ஒரு காலத்தில் கல்வியில் சிறந்த விளங்கியது. ஆனால், இன்று அந்நிலை மாறியுள்ளது. இலங்கையில் வடக்கு மாகாணமே பாடசாலையிலிருந்து விலகியர்கள் அதிகளவானவர்கள் உள்ள மாகாணமாகவுள்ளது. அடுத்தாக கிழக்கு மாகாணம் உள்ளது என யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.
பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலை செல்ல ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, வியாழக்கிழமை (27) யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், “பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனைத் தடுப்பதற்கு பல திட்டங்களை வணிகர் சங்கத்தினூடாக முன்னெடுத்து வருகின்றோம். கடந்த மூன்று வருடத்தில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய 2000 மாணவர்களை மீண்டும் பாடசாலையில் இணைத்துள்ளோம்” என்றார்.
“யுத்தத்தால் வறுமையில் வாழ்கின்றவர்களின் குடும்பங்களின் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கின்றனர். அவர்களை மீண்டும் இணைப்பதற்கு யாழ். மாவட்டச் செயலாளருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்கின்றோம்” என்றார்.
“மீள இணைப்பவர்களில் பலர் பாடசாலைக்குச் சென்று மீண்டும் நின்றுவிடுகின்றனர். பாடசாலைக்குச் செல்லாமல் யாரும் இருக்கக்கூடாது. கைவிடப்பட்ட நிலையில் யாரும் இருக்கக்கூடாது. அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்வோம். 16 வயது வரையில் ஒரு பிள்ளை பாடசாலைக்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் நற்பிரஜையாக வளர முடியும். சமூகத்துக்கு நல்ல சமூகம் அமையும்” என அவர் மேலும் கூறினார்.