எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, இலங்கைக்கு ஆதரவளிக்கப்போவதாகவும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு உள்ளகப் பொறிமுறையொன்றை வலியுறுத்தவுள்ளதாகவும் அமெரிக்கா நேற்று புதன்கிழமை (26) அறிவித்தது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இறுதி அமர்வின் போது யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.
அத்துடன், எதிர்வரும் செம்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கை மீதான சர்வதேச பொறிமுறையொன்று கொண்டுவரப்படும் என அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், 2014ஆம் ஆண்டில் இடம்பெற்ற அமர்வின் போது அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் மூன்று யோசனைகளும் முன்வைக்கப்பட்டிருந்தன. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் மூன்றாவது யோசனையாகவும் காணப்பட்டது.
இந்நிலையில், இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (25) இலங்கை வந்தடைந்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அன்றைய தினம் மாலை சந்தித்து கலந்துரையாடிய போது, ‘இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து உள்ளக விசாரணையொன்றை நடத்துவதாக’ ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இந்த உறுதிமொழி தொடர்பில் நேற்று அமெரிக்கா திரும்புவதற்கு முன்னர் சர்வதேச ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிஸ்வால் தெளிவுபடுத்தியதுடன், அமெரிக்காவின் புதிய பரிந்துரைகள் என்னவென இதுவரையில் வெளியாகவில்லை என்றும் அது, செம்டெம்பர் மாதத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையை ஒத்ததாக அமைந்திருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.