இலண்டன் நகரில் 10 அடுக்குமாடி குடியிருப்புக்கள் இரண்டினை இணைக்கும் முகமாகவும், இரண்டு குடியிருப்புக்களிடையே பாலம் போல் செயற்படும் வகையிலும் 25 மீற்றர் நீளமுள்ள நீச்சல் தடாகமொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
25 மீற்றர் நீளமும் 3 மீற்றர் ஆழமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ள இந்த நீச்சல் தடாகம் ஸ்கை பூல் “Sky Pool” என அழைக்கப்படுகிறது. அத்துடன் 115 அடி உயரத்தில் அமைக்கப்படவுள்ள உலகில் முதல் முயற்சியான இந்த நீச்சல் தடாகமான இது கண்ணாடி போன்று தெரியக்கூடிய அடித்தளத்தை கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்த நீச்சல் தடாகத்தில் நீந்தும் ஒருவர் பாரிய பாதாளமொன்றுக்கு மேலாக மிதப்பது போன்ற அதிசய உணர்வினை அனுபவிக்க முடியும். அந்தளவுக்கு 35 மீற்றர் ஆழத்தில் சென்று வருவதை போல் புதிய உணர்வினை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் கட்டட நிர்மாணத்துறையில் மற்றும் பொறியியல் துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனமும் (Eckersley O’Callaghan) அப்பிள் நிறுவனத்துடன் இணைந்து இந்த செயற்திட்ட வடிவமைப்பில் பங்காற்றி வருகின்றன.
லண்டன் தேம்ஸ் நதிக்கரையோரமாகவுள்ள பற்றர்ஸீ பவர் ஸ்டேஷன் பிரதேசத்தில் உள்ள அதிக விலையுயர்ந்த பிரதேசங்களாக கருதப்படும் எம்பஸி கார்டனில் உள்ள குடியிருப்புக்களை இணைத்தே இந்த நீச்சல் தடாக நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 2,000 வீடுகளை உள்ளடக்கி 602,000 ஸ்ரேலிங் பவுன் ஆரம்பக்கட்ட செலவிலேயே இந்த அந்தரத்தில் தொங்கும் நீச்சல் தடாக வேலைகள் இடம்பெறுகின்றன. எதிர்வரும் 2019 ஆம் ஆண்டளவில் இவ் வேலைகள் முற்றாக நிறைவு பெறவுள்ளன.
இது குறித்து பொறியியல் துறையில் தலைசிறந்த பொறியியலாளர் பிரெய்ன் எகெர்ஸ்லி (Brian Eckersley ) தகவல் தெரிவிக்கும் போது,
இரண்டு குடியிருப்புக்களிடையில் இவ்வாறான முயற்சியை மேற்கொள்ளும் போது அது மிகவும் கடினமொனதொன்றாக விளங்குகிறது. ஏனெனில் இரண்டுக்குமிடையில் நாம் அடித்தளத்திற்கான வேலையை ஆரம்பிக்கும் போது காற்றினால் அதிக அசைவு ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார். அத்துடன் தடாகத்தின் ஒவ்வொரு பக்கத்திற்கும் நீரின் அமுக்கத்துக்கும் இடையில் சமனான அளவு அழுத்தம் பிரயோகிக்கப்படல் வேண்டும். அவ்விடயத்தில் நாங்கள் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்.
அத்துடன் தடாகத்தின் அடித்தளம் கண்ணாடி போல் தோற்றமளித்தாலும் நாங்கள் கண்ணாடியை பயன்படுத்தவில்லை. ரான்ஸ்பரன்ட அக்ரிலிக் (transparent acrylic) என்றதொரு வித்தியாசமான பிளாஸ்டிக் பொருளையே பயன்படுத்தி அடித்தளம் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நீச்சல் தடாகத்தினை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் பங்கேற்றுள்ள பால்லிமோர் குழுமத்தின் (Ballymore Group) தலைமை நிறைவேற்று அதிகாரி சீன் மல்ரையன் (Sean Mulryan) இது பற்றி தெரிவிக்கும் போது தடாகத்தில் நீந்துபவர்கள் லண்டன் நகரின் மத்தியில் பாரிய பாதாளமொன்றினூடாக காற்றில் மிதப்பது போன்ற அதிசய உணர்வினை அநுபவிக்க முடியுமென தெரிவித்துள்ளார்.