நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் கட்டாயமாக தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தும் ‘கபே’ அமைப்பு தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு அதிகாலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வாக்காளர்கள் தாம் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கும் அதேவேளை அக்கட்சியின் ஊடாகப் போட்டியிடும் ஊழலற்ற சிறந்த வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை வழங்குமாறு கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த தேர்தல்களோடு ஒப்பிடுகையில், இம்முறை சுயாதீனமானதும் அமைதியானதுமான தேர்தலொன்றிற்கான சூழல் காணப்படுகின்றது. தேர்தல்கள் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் போன்றன தமது செயற்பாடுகளை எவ்வித தடையும் இன்றி முன்னெடுப்பதை காணமுடிகிறது.
தேர்தல் சட்டங்களை பாதுகாக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் போது, கட்சி பேதங்களின்றி செயற்படுவதையும் காணமுடிகிறது. கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமைகளை காணமுடியாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வாக்காளர்களும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்காத பட்சத்தில் நீங்கள் விரும்பாத தகுதியற்ற நபர்கள் பாராளுமன்றத்துக்கு பிரவேசிப்பதற்கு அது வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே, கட்டாயமாக அனைவரும் வாக்களிக்க வேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தினார்.
தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள போதிலும் சமூக வலைத்தளங்கள் ஊடான பிரசார நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, அவற்றையும் நிறுத்துமாறு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.